சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது: அமித்ஷா ஆவேசம்

சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது: அமித்ஷா ஆவேசம்
X

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என அமித்ஷா ஆவேசமாக பேசினார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) என்பது இந்த நாட்டின் சட்டம். இதனை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த காலமே இருக்கும் நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் இருக்கும் எம்.பி. தொகுதிகளில் தங்களது வெற்றியை உறுதி செய்ய பா.ஜ.க. தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் கட்சியின் வாக்கு வங்கியை உயர்த்தவும், நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை வெல்வது குறித்தும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இம்மாநில பா.ஜ.க. ஐடி விங்க் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. எனவே ஆட்சிக்கு எதிரான மனோநிலை குறிப்பிட்ட சதவிகிதம் இருக்கும். மேற்கு வங்கத்தை பொறுத்த அளவில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. இக்கட்சி, பா.ஜ.க.வுக்கு எதிரான இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்திருக்கிறது. எனவே இந்த மாநிலத்தில் அதிகமான எம்.பி. சீட்களை வெல்ல பா.ஜ.க. இரண்டு மடங்கு தீவிரமாக பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த சூழலில் தான் ஐ.டி. விங்க் நிர்வாகிகளுடன் இன்று அமித்ஷா கலந்துரையாடியுள்ளார். அதில், "சிஏஏ குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகின்றன. இங்கு நான் நம்முடைய நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். சி.ஏ.ஏ. என்பது நாட்டின் சட்டம். அது அமல்படுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் இந்த விவகாரத்தில் மம்தா பானர்ஜி மக்களை தவறான திசையில் வழிநடத்துகிறார். அடுத்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. இம்மாநிலத்தில் ஆட்சியை அமைக்க நீங்கள் போராட வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. இம்மாநிலத்தில் 35க்கும் அதிகமான தொகுதிகளை வெல்லும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் அமித்ஷா பேசினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!