இலைக்கு எந்த காலத்திலும் சேதாரம் ஏற்படாது - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு
கடம்பூர் ராஜு
கோவில்பட்டி அருகே வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு கானா என்ற அமைப்பு சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு மருத்துவ உபகரண பொருள்களை வழங்கினார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்டா பிளஸ் கொரோனாவினால் தமிழகத்தில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தடுக்க தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைவது பற்றி கேட்டதற்கு
அதிமுக சந்திக்காத சோதனைகள் எதுவும் இல்லை.1980ல் நாடாளுமன்ற தேர்தலில் 2 இடங்களை பெற்ற அதிமுக ஆட்சியை மக்கள் செல்வாக்கு இழந்து விட்டதாக கூறி, அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால், 6 மாதத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்தது. 96ல் சட்டமன்ற தேர்தலில் 4 இடங்களை மட்டுமே அதிமுக பிடித்தது. ஆனால் 98ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று, அடுத்து வந்த 2001ல் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்தது.காற்று அடிக்கும் போது மரத்தில் இருந்து சருகுகள் உதிரும், ஆனால் இலைகள் இருக்கும்.இலைகள் தான் மரத்திற்கு புத்துணர்வு அளிக்கும், மனிதன் உயிருக்கு தேவையான ஆக்சிஜன் தருவது இலைகள் தான், இலைக்கு எந்த காலத்திலும் சேதாரம் ஏற்படாது என்றார்.
திமுக அடங்காத யானை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது குறித்து கேட்டதற்கு...
அடங்கிய யானையாக இருந்தால் ஊருக்குள் வலம் வரும் -அடங்காத யானைகள் காட்டில் தான் திரியும். அதிமுக இமலாய வெற்றி பெற்ற போதும் அடக்கமாக தான் இருந்துள்ளது. இயற்கை இடர்பாடுகளின் போது விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்படுவர்கள். 18ஆயிரம் கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்ததது அதிமுக அரசு தான். விவசாயிகளுக்கு பயிர் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் 5பவுன் தங்க நகைகடன் தள்ளுபடி என ஏழை,எளிய மக்களின் நலனுக்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இயற்கை பேரிடர் ஒரு புறம், சுகாதார பேரிடர் மறு புறம் என மக்களை காப்பதற்காக தான் மக்கள் பணிக்களுக்காக பணத்தினை அதிமுக செலவு செய்துள்ளது. மக்கள் பாராட்டினை பெற்றுள்ளோம்.அந்த நேரத்திலும் அரசு இயந்திரம் முடங்கி போகமால் சிறப்பாக செயல்பட்டது. புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள அரசு குற்றச்சாட்டு சொல்லமால் இருக்கிற நிலையை வைத்து சரியாக ஆட்சி செய்ய வேண்டும், ஆனால் முந்தைய அரசினை குற்றம்சாட்டி கொண்டு இருப்பது சரியாக இருக்காது என்றும்,
மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை எண்ணும் வரை தமிழகத்தில் மின் வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை, முந்தைய திமுக ஆட்சி காலத்தில் 13மணி நேரம் மின்தடை இருந்தது.ஆனால் அதன் பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் மின்மிகைமாநிலமாக மாற்றப்பட்டது. மே 7ந்தேதி திமுக ஆட்சி பொறுப்பு ஏற்கும் வரை மின்வெட்டு இல்லை. மின்வெட்டு பிரச்சினைக்கு பரிகாரம் தான் காண வேண்டுமே தவிர ஏதாவது சாக்குபோக்கு காரணம் சொல்லி கொண்டு இருக்க கூடாது. அதிமுக வழங்கியது போன்று மின்சாரம் வழங்க திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும்.திமுகவிற்கும் மின்சாரத்திற்கும் ஏழாம் பொருத்தம் என மக்கள் பேச தொடங்கி விட்டனர்.விவசாயத்திற்கு 24 மணிநேரமும் அதிமுக ஆட்சிகாலத்தில் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது.
தேவையானவற்றை செய்வதற்கு தான் ஆட்சி பொறுப்பிற்கு வந்து இருக்கிறார்கள். அதனை செய்ய வேண்டுமே தவிர முந்தைய ஆட்சி பற்றி குறை கூறக்கூடாது. முந்தைய ஆட்சி குறை இல்லாத ஆட்சி தான். அரசியலில் மாற்றம் என்பது வேறு என்றும், மக்கள் வெறுப்பின் காரணமாக அல்ல. திமுக கூட்டணியின் பலம் காரணமாக வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் அதிமுகவை மக்கள் வெறுக்கவில்லை. 3 சதவீத வித்தியாசத்தில் தான் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்த மாற்றம் பெரிய மாற்றம் கிடையாது. இது சரியாக நீண்ட நாள்கள் ஆகாது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu