மாநில வளர்ச்சிக்குழுவில் விவசாய நிபுணர்களும் இடம்பெற வேண்டும்- முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை

மாநில வளர்ச்சிக்குழுவில் விவசாய நிபுணர்களும் இடம்பெற வேண்டும்- முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை
X

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் ஐவி.நாகராஜன்

மாநில வளர்ச்சிக்குழுவில் விவசாய நிபுணர்களும் இடம்பெற வேண்டும் என தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை வைிடுத்துள்ளது.

மாநில வளர்ச்சி கொள்கை குழுவில் விவசாய நிபுணர்களும் இடம்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல்வருக்கு கோரிக்கை மனு ஒன்றை இணைய வழி மூலமாக அனுப்பியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் ஐவி.நாகராஜன் இணைய வழி மூலமாக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது, மே மாதம் 7ம் தேதி தமிழ்நாட்டில் ௨௩ வது முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றார்.

அவர் பொறுப்பேற்ற நாள் முதல் கொரனாவை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருவது வரவேற்க தகுந்தது. அதேபோல் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல குழுக்களை உருவாக்கி ஒவ்வொரு நாளும் ஆலோசனை நடத்தி சிறப்பாக செயல்பட்டு வருவது நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் 1971ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியால் உருவாக்கப்பட்ட மாநில திட்டக்குழுவை கடந்த ஆண்டு மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இப்போது இந்த குழுவை உயிரோட்டமாக செயல்பட வைப்பதற்கான முறையில் இந்த குழுவில் புதிய உறுப்பினர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

முதல்வர் தலைமையில் செயல்படும் இந்த வளர்ச்சி கொள்கை குழுவிற்கு துணை தலைவராக பொருளாதார அறிஞர் பேராசிரியர்.ஜெயரஞ்சனை நியமித்துள்ளது பாராட்டதகுந்ததாகும். பொருளாதாரம்,புள்ளியியல்,ஆங்கில மருத்துவம் மற்றும் சித்த மருத்தும்,கலை,தொழில்,அரசியல் என்று பல்துறை நிபுணர்கள் இந்த குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் இந்த குழுவில் வேளாண் துறை சார்ந்த நிபுணர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பது வருத்தமாக உள்ளது. வேளாண் நிபுணர்களோ டெல்டா மாவட்டங்களில் உள்ள முன்னோடி விவசாயிகளோ இந்த குழுவில் உறுப்பினராக நியமிப்பது என்பது பொருத்தமாக இருக்கும்.

மாநில வளர்ச்சி குழுவில் குறிப்பிடும் படியாக முன்னோடி விவசாயிகளோ அல்லது வேளாண் விவசாயிகளோ இருந்தால் விவசாயிகள் பிரச்சினைகளை உணர்ந்து வழிகாட்ட முடியும். அதுமட்டுமல்லாமல் விவசாய துறையின் தேவைகள் இயற்கை விவசாயம் போன்ற நவீனத்துவம் குறித்த அம்சங்களை முன்னெடுப்பதற்கு அவர்களால் வழிகாட்ட முடியும்.

பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட முன்னோடி மூத்த விவசாயிகளின் ஆலோசனைகள் இக்குழுவிற்கு உரிய பலனை தரும். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போடபடும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலை வரும்போது இந்த குழுவில் வேளாண் பிரதிநிதிகள் இருந்தால்தான் இன்னும் வலுசேர்ப்பதாக இருக்கும். எனவே,தமிழக முதல்வர் அவர்கள் முன்னோடி விவசாயிகள் அல்லது விவசாயம் சார்ந்த வல்லுநர்களை இக்குழுவில் இடம் பெற செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று ஐவி.நாகராஜன் முதல்வருக்கு அனுப்பியுள்ள தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி