டெல்லியில் நடைபெற்ற என்.டி.ஏ. கூட்டத்தை புறக்கணித்த அன்பு மணி ராமதாஸ்

டெல்லியில் நடைபெற்ற என்.டி.ஏ.  கூட்டத்தை புறக்கணித்த அன்பு மணி ராமதாஸ்
X

அன்பு மணி ராமதாஸ்.

டெல்லியில் நடைபெற்ற என்.டி.ஏ. கூட்டத்தை அன்பு மணி ராமதாஸ் புறக்கணித்து உள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழகத்திலிருந்து ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜிகே வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்ளவில்லை.

நாடாளுமன்ற மக்களவைக்கு 543 எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பாஜக 240 தொகுதிகளுக்கு மேல் வந்திருக்கிறது. அவர்கள் கூடி இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள்.

மேலும் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார், தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவோடு மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார் நரேந்திர மோடி.

இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதே நேரத்தில் இந்தியா கூட்டணியும் ஆட்சியமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குடியரசு தலைவரை சந்தித்து இதற்காக உரிமை கோர இருப்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் அவ்வாறு நடக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே பாஜக பதவியேற்பு நிகழ்வுக்காக வேகமாக காய்களை நகர்த்தி வருகிறது. பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராக இருக்கும் நிலையில், அதற்கான முன் தயாரிப்புகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியின் எம்பிக்கள் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக பிரதமர் வேட்பாளரான பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்த போது எம்பிக்கள் கரகோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர். தொடர்ந்து அந்த கூட்டணியில் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் கையெழுத்திட்டனர். மேலும் தங்கள் ஆதரவு கடிதங்களையும் எம்பிக்கள் வழங்கினர். இதையடுத்து ஜூன் 9ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தேசிய அளவில் வெற்றி பெற்ற பாஜக ஆட்சி அமைத்தாலும் தமிழகத்தில் அந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. அந்த கட்சி மட்டுமல்லாது. அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்த தலைவர்களும் தோல்வியை சந்தித்தனர். தமிழகத்தில் பாமக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றிருந்தன.

தேர்தலில் போட்டியிட்ட பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் தோல்வியை சந்தித்த போதிலும் தற்போது அந்த கூட்டணி தலைவர்களுக்கு டெல்லியில் இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், ஏ சி சண்முகம், தமமுக தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை.

அதே நேரத்தில் ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழா நிகழ்ச்சிக்கு அவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாகவும் அடுத்தடுத்த நாட்களில் அவர்கள் டெல்லிக்கு பயணம் மேற்கொள்வார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !