திராவிட இயக்கத்தின் தாயான நீதிக்கட்சியில் பற்றுள்ள நாவலர் நெடுஞ்செழியன்

திராவிட இயக்கத்தின் தாயான நீதிக்கட்சியில் பற்றுள்ள நாவலர் நெடுஞ்செழியன்
X

நாவலர் நெடுஞ்செழியன்

பெரியாரின் திராவிடர் கழகத்தில் இணைந்தபோது, நாவலர் நெடுஞ்செழியனுக்கு 24 வயது. 1949-ல் திமுக உதயமானபோது 29 வயதேயான நெடுஞ்செழியன் கட்சியினுடைய துணைப் பொதுச் செயலாளர் ஆனார்.

நெடுஞ்செழியன் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர் "நாவலர்" என்றும் அழைக்கப்படுவார்.

திராவிட இயக்கம் அதன் அரசாட்சிக் களத்தில் அண்ணாவுக்கும் கருணாநிதிக்கும் அவர்களுக்குப் பின் வந்தோருக்கும் எவ்வளவு கடமைப்பட்டதோ அதே அளவுக்கு அதன் அறிவார்ந்த தளத்தில் அன்பழகனுக்கும் நெடுஞ்செழியனுக்கும் கடமைப்பட்டிருக்கிறது.

தந்தை பெரியாரின் பகுத்தறிவு மாணவனாகவும், அறிஞர் அண்ணாவின் உற்ற நண்பனாகவும், திமுக கட்சியில் பொதுச்செயலாளர் ஆகவும் இருந்தார். எம். ஜி. ஆரை ராமு என்றும், கலைஞர் கருணாநிதியை கருணா என்றும், ஜெயலலிதாவை ஜெயா என்றும் செல்லமாக அழைப்பாராம்.


திராவிட இயக்கத்தின் தாயான நீதிக்கட்சியில் பற்றுள்ள குடும்பத்தைச் சேர்ந்த நெடுஞ்செழியன் பிறந்த ஊர் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திருக்கண்ணபுரம். 11-7-1920 ஆம் தேதி ராஜகோபாலனார்-மீனாட்சிசுந்தரி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். பெற்றோரால் சூட்டப்பட்ட பெயர் நாராயணசாமி. தமிழ்ப் பற்றும் திராவிட இயக்கம் முன்னெடுத்த பெயர் அரசியலும் 'நெடுஞ்செழியன்' என்று தன் பெயரை மாற்றிக்கொள்ள வழிவகுத்தது. சீனுவாசன் என்ற இவரது தம்பி இப்படியே 'இரா.செழியன்' ஆகி தலைசிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவராகப் பார்க்கப்பட்டார்.

இவரது மனைவி பெயர் மருத்துவர் விசாலாட்சி. இவர்களுக்கு மதிவாணன் (பிறப்பு 20-6-1951) என்னும் மகன் உள்ளார். இவரது மருமகள் கல்யாணி மதிவாணன், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். இவருக்கு ஜீவன் நெடுஞ்செழியன் (இந்திய டென்னிஸ் வீரர்) என்னும் பேரனும், சொப்னா மதிவாணன் என்னும் பேத்தியும் உள்ளனர்.புகழ்பெற்ற பாராளுமன்ற உறுப்பினரான இரா. செழியன், இவர்தம் தம்பிகளுள் ஒருவர் ஆவார்.

நெடுஞ்செழியனின் தலைமையில், 1944-ல் கும்பகோணத்தில் நடந்த திராவிடர் மாணவர் மாநாடுதான் நீதிக் கட்சிக்குத் திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றத்தை விரைவுபடுத்தியது. அக்கூட்டத்துக்குக் கிடைத்த இளைஞர்களின் வரவேற்பை அறிந்த பிறகே, பெரியார் நீதிக் கட்சியைச் சீர்திருத்தவும் பெயர் மாற்றவும் முடிவெடுத்தார். திமுகவில் அன்பழகனுக்கும் திமுக, அதிமுகவில் நெடுஞ்செழியனுக்கும் கிடைத்த இரண்டாவது இடம் என்பது திராவிட இயக்க வரலாற்றில் அவர்கள் வகித்த முதலிடத்துக்காகத்தான்.

பள்ளிகளில் சத்துணவு வழங்குவதைப் பற்றி இன்னமும்கூட விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 1971 நவம்பரில் சென்னையில் கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இலவச உணவுத் திட்டத்தை ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து தொடங்கிவைத்தவர் நெடுஞ்செழியன். அத்திட்டத்தைத் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்ற தமது விருப்பத்தையும்கூட அவர் தெரிவித்தார். ஆனால், அத்தகைய முயற்சிகள் ஏனோ பின்பு தொடரவில்லை.

அமைச்சரவையில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த நெடுஞ்செழியனை அவரது சகாக்கள் அடுத்த முதல்வராக ஏற்றுக் கொள்ளவில்லை. தற்காலிக அமைச்சரவையின் தலைமைப் பொறுப்போடு அவர் முதலிடம் முடிவுக்கு வந்தது. முன்னையோரை முந்திக்கொண்டார் என்பது கருணாநிதி தன் காலம் முழுவதும் சுமந்து நின்ற பழிகளில் ஒன்று. தனது 'நெஞ்சுக்கு நீதி'யில் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தான் முதல்வர் பொறுப்பேற்க நேர்ந்தது தன் விருப்பத்தால் நிகழ்ந்தது அல்ல என்பதை ஒவ்வொரு வார்த்தையிலும் அவர் வெளிப்படுத்தியிருப்பார்.


திராவிட இயக்க வரலாற்றில் மிகுந்த சுவாரஸ்யமான வரலாற்றுக்குச் சொந்தக்காரர் நாவலர் நெடுஞ்செழியன். திமுகவில் நாவலருக்கு இணையாக வேகமாக வளர்ந்த தலைவர் யாரும் கிடையாது. பெரியாரின் திராவிடர் கழகத்தில் இணைந்தபோது, நாவலர் நெடுஞ்செழியனுக்கு 24 வயது. 1949-ல் திமுக உதயமானபோது, 29 வயதேயான நெடுஞ்செழியன் அந்தக் கட்சியினுடைய துணைப் பொதுச் செயலாளர் ஆனார்.

அண்ணாவால் நடமாடும் பல்கலைக்கழகம் என்று போற்றப்பட்ட அவர் ஆறே ஆண்டுகளில், மிக இளம் வயதில் திமுகவின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். ஆம், 1956 மே மாதத்தில் திருச்சி மாநில மாநாட்டில், "தம்பி வா! தலைமை தாங்க வா! உன் ஆணைக்கு நாங்கள் எல்லாம் அடங்கி நடப்போம். தலைமையேற்க வா!" என்று அண்ணாவால் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு முன்மொழியப்பட்டபோது அவருடைய வயது 35. மீண்டும் அண்ணா அதே பதவியில் அமரும் வரை நான்காண்டு காலம் தலைமைப் பொறுப்பில் இருந்தார் நெடுஞ்செழியன்.

நெடுஞ்செழியன் 12 ஜனவரி 2000, புதன் கிழமை அன்று காலமானார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!