நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி மீண்டும் உறுதி
தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் சாதிவாரி மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவோம் என ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.
மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.
முதற்கட்ட வாக்குப்பதிவில் 102 தொகுதிகளிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 88 தொகுதிகளிலும் என மொத்தம் இதுவரை 190 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. மே 7ஆம் தேதி குஜராத்தில் உள்ள 27 லோக்சபா தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் குஜராத் மாநிலத்தில்தான் அதிகபட்ச தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநிலம் பதான் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சந்தன்ஜி தாக்கூரை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது:-
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 90 சதவீதம் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி மக்கள் உள்ளனர். ஆனால் கார்ப்பரேட், மீடியா, தனியார் மருத்துவமனைகள், தனியார் பல்கலைக்கழகங்கள் அல்லது அரசு உயர் பதவிகள் போன்றவற்றில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு, பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவோம்.
அரசியலமைப்பை மாற்றுவதற்கு ஆளும் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் திட்டமிடுகின்றன. இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக அவர்கள் உள்ளனர். இவர்களின் ஆட்சிக்காலத்தில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது/
இவ்வாறு ராகுல் காந்தி பேசியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu