உரிமைக்காக சிறை தண்டனை அனுபவித்த மூத்த பத்திரிகை ஆசிரியர் முத்துப்பாண்டியன்
முத்துப்பாண்டியன்.
உரிமைக்காக மூத்த பத்திரிகை ஆசிரியர் முத்துப்பாண்டியன் சிறை தண்டனை அனுபவித்து உள்ளார்.
பத்திரிகை துறையின் வாழும் வரலாற்று சின்னமாக கருதப்படும் அவரைப்பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பத்திரிகைத்துறை பணி என்பது சமூக பொறுப்புணர்வு மிக்கது. மேலோட்டமாக நாம் பத்திரிகைகளைப் படித்து பார்க்கும்போது செய்திகளை படித்துவிட்டு அதனை எளிதாக கடந்து சென்று விடுவோம். ஆனால் ஒவ்வொரு செய்தியிலும் உள்ள பின்புலம், அதனுடைய உண்மை தன்மை, அது ஏற்படுத்த போகும் தாக்கம் ஆகியவை வரலாற்று சிறப்புமிக்கது. அதனால் தான் இன்றைய செய்தி நாளைய வரலாறு என கூறப்படுகிறது.
உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது இந்திய திருநாட்டை நீதித்துறை, நாடாளுமன்றம், நிர்வாகம், பத்திரிகை துறை என்ற நான்கு தூண்கள் தாங்கி நிற்கிறது. நமது வாழ்வியல் நடைமுறையில் எப்படி மாதா, பிதா, குரு, தெய்வம் என சொல்கிறோமோ அதே போல இந்த நான்கு தூண்களும் நன்றாக இருந்தால் தான் நாட்டின் பொருளாதாரம் சிறப்படைய முடியும். மக்களும் நிம்மதியாக வாழ முடியும் என்பது பொதுவான கருத்து.
அதனால் தான் வால்டரின் வாள் முனையை விட பேனா முனைக்கு சக்தி அதிகம் என போற்றப்படுகிறது. போர்க்களத்தில் வாள் முனையால் வீழ்த்த முடியாததை கூட எழுத்தாளரின் பேனா முனை எழுத்துக்கள் புரட்சி ஏற்படுத்தி எதிரிகளை வீழ்த்தி விடும் சக்தி கொண்டது. இது தான் உலக அளவில் பத்திரிகை மற்றும் எழுத்து துறையின் சிறப்பு.
ஆனால் நமது நாட்டில் இந்த பத்திரிகை துறை என்ன தான் நான்காவது தூண் எனப் போற்றப்பட்டாலும் பத்திரிகை துறையில் பணியாற்றுபவர்கள் செய்திகளுக்காக அனுபவிக்கும் தொல்லைகள், கொடுமைகள் ஏராளம். அந்த வகையில் இன்று பத்திரிகை துறையில் உரிமைக்காக சிறை தண்டனை அனுபவித்த மூத்த பத்திரிகை ஆசிரியர் ஒருவரை பற்றி பார்க்கலாம். இந்த சம்பவம் நடந்தது 1994 ஆம் ஆண்டு காலகட்டம்.
டிஜிட்டல் மீடியா மற்றும் இன்று புற்றீசல் போல் வளர்ந்துள்ள சமூக வலைத்தளங்கள் தோன்றாத கால கட்டம் அது. தொலைக்காட்சிகள் கூட பெயரளவில் தான் அப்போது ஒன்று இரண்டு இருந்தன. ஆதலால் சட்டமன்ற நிகழ்வுகளை அப்படியே அச்சு ஊடகம் எனப்படும் பத்திரிகைகள் தான் வெளியிட்டு வந்தன.
அந்த காலகட்டத்தில் சாத்தான்குளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன். அமைச்சராக இருந்தவர் நடேசன் பால்ராஜ். சாத்தான்குளம் சட்டமன்ற உறுப்பினர் தொடர்பாக அமைச்சர் தெரிவித்த கருத்தை வெளியிட்ட காரணத்திற்காக அப்போது அமரர் கே பி கே நடத்திய தினகரன் பத்திரிகையில் ஆசிரியராக இருந்த முத்துப்பாண்டியன் என்பவர் மீது சட்டமன்ற பேரவையில் உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்பட்டது. சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு உரிமை மீறல் குழு இது பற்றி விசாரிக்கலாம் என அனுப்பி வைக்கப்பட்டது.
கிணற்றில் போடப்பட்ட கல்போல் கிடந்த அந்த பிரச்சினை சுமார் ஓராண்டு காலம் கழித்து அரசியல் அழுத்தம் காரணமாக மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது . உரிமை மீறல் குழு இந்த பிரச்சினையில் அவை குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட செய்தியை தினகரன் பத்திரிகையில் பிரசுரம் செய்த காரணத்திற்காக அதன் பத்திரிகை ஆசிரியருக்கு ஏழு நாட்கள் சிறைத் தண்டனை விதித்தது .
இந்த தண்டனையை நிறைவேற்றும் பொறுப்பு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பத்திரிகையின் செய்தி ஆசிரியர் முத்துப்பாண்டியனை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினார்கள். மயிலாப்பூரில் இருந்த பத்திரிகை அலுவலகத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சென்னை மத்திய சிறையில் அடைத்தனர். ஏழு நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும் அன்றைய பத்திரிகை நிர்வாகத்தினர் நீதிமன்றத்தை நாடியதன் காரணமாக மூன்று நாட்கள் முடிந்ததும் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது.
இதன் காரணமாக மே ஐந்தாம் தேதி கைது செய்யப்பட்ட முத்துப்பாண்டியன் எட்டாம் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்து கால் நூற்றாண்டு முடிந்துவிட்டாலும் இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பது போல் இது ஒரு வரலாற்று தகவலாக இன்றைய இளம் தலைமுறையினருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
உரிமைக்காக சிறை தண்டனை அனுபவித்த முத்துப் பாண்டியன் இன்று செப்டம்பர் 18ஆம் தேதி 84 ஆம் வயது முடிந்து 85 ஆவது வயதில் அடி எடுத்து வைக்கிறார். சென்னையில் மகள்கள், மகன்கள் பேரக்குழந்தைகள் என குடும்பத்துடன் வசித்து வரும் அவர் அன்றைய தினம் நடந்த நிகழ்வுகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
அது என்ன என்பதை இனி பார்ப்போம்...
பத்திரிகையாளர்கள் வெளியிடும் செய்திக்காக பல நேரங்களில் அரசியல் தலைவர்களால் அச்சுறுத்தப்படுவது உண்டு. அப்படித்தான் இந்த சம்பவமும் நடந்தது. நான் கைது செய்யப்பட்ட தினத்தன்று மே ஐந்தாம் தேதி அன்று வணிகர் தினம் என்னை கைது செய்த காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு மதிய உணவிற்காக கடை கடையாக தேடினார்கள்.வணிகர் தினம் காரணமாக கடைகள் மூடப்பட்டு இருந்ததால் உணவு கிடைக்கவில்லை. இறுதியில் ரயில் நிலையத்தில் உள்ள கேண்டீனில் தயிர் சாதம் வாங்கி கொடுத்தார்கள். அதை சாப்பிட்டுவிட்டு சிறையில் தள்ளப்பட்டேன். நான் சிறைக்கு சென்றதும் என்னை பழ. நெடுமாறன், நக்கீரன் கோபால் ஆகியோர் வந்து சந்தித்தார்கள். தைரியமாக இருக்கும் படி கூறினார்கள். இதற்கிடையில் நிர்வாகத்தில் இருந்து நீதிமன்றத்தில் செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் நான் ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்பட்டேன். நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் பல மணி நேரம் கழித்து தான் என்னை சிறையில் இருந்து வெளியே அனுப்பினார்கள்.
சட்டமன்ற வரலாற்றில் அவை குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பகுதி என ஒரு காரணத்தை கூறி எனக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் பார்வையில் அது அவர்களுக்கு சரியாக இருக்கலாம். ஆனால் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக சபையில் நடந்த ஒரு விவாதத்தை சம்பந்தப்பட்ட தொகுதி மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகத்தான் நான் அன்று வெளியிட்டு இருந்தேன். இது ஒரு பத்திரிகை ஆசிரியரின் கடமை, உரிமை என்று தான் நான் அதை கருதினேன். அதற்காக சிறைத்தண்டனை அனுபவித்ததை நான் பெருமையாக தான் கருதினேன். பின்னாளில் இது தொடர்பாக என்னிடம் பேட்டி எடுத்த ஆங்கில பத்திரிகைகளிலும் எனது கருத்தாக இதனை பதிவு செய்தேன்.
இன்று ஊடகங்களின் வளர்ச்சி என்பது அபரிமிதமாக உள்ளது. நாம் எந்த ஒரு கருத்தையும் அச்சு ஊடகத்திற்காக, காட்சி ஊடகத்திற்காக காத்திருக்காமல் நொடிப்பொழுதில் சமூக ஊடகங்களில் பதிவிடுவதன் மூலம் உலகிற்கே வெளிப்படுத்தி விடலாம். சமூக ஊடகங்களின் இந்த வளர்ச்சியை பார்க்கும்போது கருத்து சுதந்திரத்தின் வெளிப்பாடு எப்படி எல்லாம் உருமாறி இருக்கிறது என பிரமிப்பு அடைகிறேன் என்று தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu