‘இயக்கம் முடிவே என் முடிவு’ ஜெயலலிதா பிறந்த நாளில் எடப்பாடி புது சபதம்

‘இயக்கம் முடிவே என் முடிவு’ ஜெயலலிதா பிறந்த நாளில் எடப்பாடி புது சபதம்

அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

‘இயக்கம் முடிவே என் முடிவு’ என ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி எடப்பாடி பழனிசாமி புது சபதம் எடுத்துள்ளார்.

மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த திமுக ஆட்சிக்கு நாம் அனைவரும் முடிவுரை எழுதிட சபதமேற்போம்.என்று எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி மறைந்த முதல்வரும் அதிமுகவின் மறைந்த பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்தநாளாகும். ஜெயலலிதா உயிரோடு இருந்த வரைக்கும் ஒரு வார காலத்திற்கு கொண்டாடுவார்கள். கோவில்களில் அன்னதானம் அமர்களப்படும். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஒரு நாள் மட்டுமே பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.

நாளைய தினம் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, அ.தி.மு.க. முன்னாள் முதல்வரும், பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் காவல் தெய்வம், நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் வழிவந்த அரசியல் ஞானி, தமிழக மக்களின் பாசத்திற்குரிய அன்பு அம்மா அவர்களின் 76ஆவது பிறந்த நாளில் அவரைப் பற்றிய இனிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளவும், அவர் காட்டிய வெற்றிப் பாதையில் தொடர்ந்து நடைபோட உறுதி ஏற்கவும், கழக உடன்பிறப்புகளை அழைக்கும் இந்த அன்பு மடல் வழியாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியத் திருநாட்டில் எந்த ஒரு பெண் முதலமைச்சருக்கும் இல்லாத வகையில், தனிச் சிறப்பாக மிகக் குறைந்த வயதில் முதலமைச்சர் என்கிற மாபெரும் உச்சத்தைத் தொட்ட ஜெயலலிதா 6 முறை ஒரு மாநிலத்தில் முதலமைச்சராகப் பதவி வகித்த ஒப்பற்ற பெருமையும் அம்மா அவர்களையே சாரும். இது, வேறு எந்த முதலமைச்சருக்கும் இல்லாத தனிப் பெரும் சிறப்பு. இது, நம் பேரியக்கத்திற்குக் கிடைத்த பெருமை. சுயநலம் மிக்க தீய சக்தி, பொய்யான காரணங்களைச் சொல்லி புரட்சித் தலைவரை திமுகவில் இருந்து வெளியேற்றிய போது, லட்சக்கணக்கான தொண்டர்கள் ஒன்று கூடி, "நாம் ஒரு இயக்கம் காண வேண்டும்; அந்த இயக்கத்திற்கு நீங்கள் தலைவராக இருக்க வேண்டும்" என்று சொல்லி, தொண்டர்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கம்தான் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

இயக்கத்தைத் தலைவர்கள் தான் களம் காணுவார்கள். மாறாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தூய இயக்கம். எப்படி, புரட்சித் தலைவர் உயிரோடு இருக்கின்ற வரையிலே தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்து மக்களுக்காகப் பாடுபட்டு மறைந்தாரோ அதேபோல அம்மா அவர்களும் இறுதிவரையில் மக்களுக்காகவே வாழ்ந்தார்கள். சமூக நீதி, சமத்துவம், சமதர்ம சமுதாயம், ஏற்றத் தாழ்வு இல்லாத நிலை என்று வெறும் வார்த்தைகளுக்காகவும், வார்த்தை ஜாலங்களுக்காகவும், தேர்தல் வாக்குகளுக்காகவுமே தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்ற திமுக-வைப் போல, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இல்லை என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள் :

OBC-க்கான இடஒதுக்கீட்டில் 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று, 19 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்தி ஒரே கையெழுத்தில் கொண்டு வந்தவர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள். இட ஒதுக்கீடு 50 சதவீதமாகக் குறைய இருந்த சூழ்நிலையில், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் 69 சதவீத இடஒதுக்கீட்டை வெளியிடச் செய்து, அதற்கு ஒரு சட்டப் பாதுகாப்பையும் ஏற்படுத்தி, சமூக நீதியைக் காத்தவர் நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். புரட்சித் தலைவர் வழியிலும், புரட்சித் தலைவி அம்மா வழியிலும் தொடர்ந்து பயணித்து வருகின்ற நான், எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், நீட் தேர்வின் மூலமாக அரசுப் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், சமூக நீதியைக் காக்க வேண்டும் என்பதற்காகவும், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டைக் கொடுத்து மாணவர்களின் வாழ்க்கையில் மருத்துவக் கனவிற்கு விளக்கேற்றி வைத்தோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டு இருந்த தொண்டர்களை, இன்றைக்கு 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் தூய இயக்கமாக உங்களால், என்னால் உருவாக்க முடிந்திருக்கிறது.

இது, அடிமட்டத் தொண்டர்களுக்கான இயக்கம். எந்தத் தொண்டருக்கும், எந்த நேரத்திலும் உரிய வாய்ப்பு உரிய நேரத்தில் நிச்சயம் கிடைக்கும் என்பதை புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும் நிரூபித்து இருக்கிறார்கள். நம் இருபெரும் தலைவர்களின் வழியிலே இந்த இயக்கம் தொடர்ந்து பீடுநடை போட்டு வருகிறது. ஒரு அடிப்படைத் தொண்டர் எவ்வித பிரதிபலனும் பாராமல் உண்மையாகப் பணியாற்றி வரும்போது, அவர் எதிர்பார்க்காத நேரத்தில் உச்சபட்ச பதவியை இந்த இயக்கம் வழங்கும். அதுதான் வரலாறு என்பதை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சமூகநீதி, சமதர்மம், சமத்துவம் நிலவ வேண்டும்; ஏற்றத் தாழ்வு இல்லாத சமுதாயம் படைக்க வேண்டும்; அடித்தட்டு மக்களுக்கு வளமான வாழ்க்கையை ஏற்படுத்தித் தர வேண்டும்; குறிப்பாக, பெண்கள், விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், மாணவ, மாணவிகளுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும்; அவர்களுடைய தேவை என்ன? அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, இருப்பிட வசதி போன்றவற்றை எவ்வாறு நிறைவேற்றித் தரவேண்டும்? அதற்குண்டான வழிவகைகளை நாம் எப்படி செய்ய வேண்டும் என்பதை அல்லும், பகலும் அயராது சிந்தித்துக் கொண்டிருக்கும் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே.

புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் வகுத்த பாதையிலே தொடர்ந்து செல்லும் மாணவனாக நானும், என்னோடு கரம் கோர்த்து பயணிக்கின்ற நீங்களும், இந்த இயக்கத்தை மென்மேலும் வலுப்படுத்திட வேண்டும். இதய தெய்வம் அம்மா அவர்கள் சொன்னதைப் போல, இந்த இயக்கம் நூறு ஆண்டுகளைக் கடந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று சொன்னால், பல்வேறு வகைகளில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த விடியா திமுக ஆட்சிக்கு நாம் அனைவரும் முடிவுரை எழுதிட சபதமேற்போம்.

கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும், எப்படி புரட்சித் தலைவர் இருக்கின்ற போது எந்த சிந்தனையும் இல்லாமல் புரட்சித் தலைவர் சொல்வதைக் கேட்டு நடந்தோமோ; எப்படி மாண்புமிகு அம்மா அவர்கள் இருக்கின்ற போது, அம்மா அவர்கள் சொன்னதையே வேதவாக்காக ஏற்று பின்தொடர்ந்தோமோ அது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பலம். இயக்கம் மட்டுமே என்னுடைய உயிர்.

இயக்கம் எடுக்கின்ற முடிவே என்னுடைய முடிவு என்று கண்மூடித்தனமாக பின் தொடர்கின்ற தொண்டர்களைப் பெற்றிருக்கின்ற பேரியக்கம் தான் நம்முடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். மக்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிப்பதற்குத் தயாராகிவிட்டார்கள். எனதருமைக் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இரவு, பகல் பாராமல் தேர்தல் பணியாற்றி, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பெற்றதைப் போன்ற மகத்தான வெற்றியை எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பெற்று, அந்த வெற்றியை புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோருக்கு வெற்றி மாலைகளாக, அவர்கள் நீடு துயில் கொள்ளும் நினைவிடங்களில் சமர்ப்பிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம். நம்மையெல்லாம் அன்புடன் அரவணைத்து, அரசியல் பாடம் சொல்லி, வழிநடத்திய நம் அன்பு அம்மா அவர்களின் பிறந்த நாளில், கழகம் காக்கவும், கழகத்தை தேர்தல்களில் மகத்தான வெற்றி பெறச் செய்திடவும், நாம் அனைவரும் அயராது உழைப்போம்! உழைப்போம்! உழைப்போம்! என்று உளமார் உறுதி ஏற்போம். அதேபோல், 2026-ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆண்டு என்பதையும் உறுதிப்படுத்துவோம். வாழ்க பேரறிஞர் அண்ணா நாமம்! வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அழியாப் புகழ். வாழ்க ஜெயலலிதா புகழ்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story