‘ஓட்டு ஜிகாத்’ தேர்தல் பிரச்சாரத்தில் இண்டியா கூட்டணி மீது மோடி தாக்கு

‘ஓட்டு ஜிகாத்’ தேர்தல் பிரச்சாரத்தில் இண்டியா கூட்டணி மீது மோடி தாக்கு
X

பிரதமர் மோடி.

காங்கிரஸ் கட்சிக்காகப் பாகிஸ்தான் தலைவர்கள் பிரார்த்தனை செய்து கொள்வதாகச் சாடிய பிரதமர் மோடி, ராகுல் காந்தியைப் பிரதமர் ஆக்க வேண்டும் எனப் பாகிஸ்தான் விரும்புவதாகச் சாடியுள்ளார்.

நமது நாட்டில் இப்போது லோக்சபா தேர்தல் நடந்து வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன. குறிப்பாகப் பிரதமர் மோடி தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வந்தார்.

குஜராத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்து பேசினார். மத்திய குஜராத்தின் ஆனந்த் நகரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் அவர், காங்கிரஸ் இங்கு மெல்ல உயிரிழந்து கொண்டு இருக்கிறது என்றும் இதைப் பார்த்து பாகிஸ்தான் அழுகிறது என்ரும் சாடினார். மேலும், காங்கிரஸ் என்பது பாகிஸ்தானின் சீடர் தான் என்று சாடிய அவர், காங்கிரஸ் கட்சியின் இளவரசரை அடுத்து நாட்டின் பிரதமர் ஆக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது என்றும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்பதைக் காங்கிரஸ் கட்சியால் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க முடியுமா என்றும் அவர் கடுமையாகச் சாடினார். சமீபத்தில் பாகிஸ்தானில் இம்ரான் கான் அமைச்சரவையில் இருந்த முன்னாள் அமைச்சரான சவுத்ரி ஃபவாத் ஹுசைன் என்பவர் ராகுல் காந்தி வீடியோவை பகிர்ந்து அவரை பாராட்டி இருந்தார். அதை மறைமுகமாகச் சாடும் வகையிலேயே பிரதமர் மோடி இப்போது இப்படிப் பேசியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "காங்கிரஸ் இங்குத் தேர்தலில் வெல்ல முடியாமல் சாவதால் பாகிஸ்தான் அழுகிறது. பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரசுக்காகப் பிரார்த்தனை செய்கின்றனர். இங்குள்ள இளவரசரை (ராகுல் காந்தியைக் குறிப்பிடும் வகையில்) அடுத்த பிரதமராக்கப் பாகிஸ்தான் துடிக்கிறது. இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஏனென்றால் காங்கிரஸ் கட்சியே பாகிஸ்தானின் சீடர் என்பது நமக்கு முன்பே தெரியும். இப்போது பாகிஸ்தானுக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான கூட்டணி அம்பலமாகி உள்ளது. இந்தியாவில் ஒரு பலவீனமான பிரதமர் வேண்டும் என்றே பாகிஸ்தான் நினைக்கிறது.

இப்போது,​​இந்தியா கூட்டணி ஓட்டு ஜிகாத்தை கையில் எடுத்துள்ளது. இதுவரை நாம் 'லவ் ஜிகாத்', 'லேண்ட் ஜிகாத்' பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த ஓட்டு ஜிகாத்தை முதலில் சொன்னவர் யாரோ படிக்காத நபர் இல்லை. படித்த இஸ்லாமியர் ஒருவரே இது குறித்து முதலில் குறிப்பிட்டார். ஜிகாத் என்றால் என்ன என்று உங்கள் அனைவருக்கும் தெரியும் என நினைக்கிறேன். இது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகும், ஒரு காங்கிரஸ் தலைவர் கூட இதைக் கண்டிக்கவில்லை. நான் உயிருடன் இருக்கும் வரை முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாது. நமது அரசியலமைப்பு சட்டம் பட்டியல் சாதி, பழங்குடியினர் மற்றும் ஓபிசி பிரிவினருக்குத் தான் இட ஒதுக்கீடு வழங்குகிறது. அதை மாற்றி இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் காங்கிரஸ் விரும்புகிறது. மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அரசியல் சட்டத்தை மாற்ற மாட்டோம் என்றும் காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இட ஒதுக்கீட்டை வழங்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க முடியுமா?

உலக நாடுகள்: இன்று உலகில் மோதல்களைத் தவிர்த்து, அமைதியை ஏற்படுத்தும் நாடாக இந்தியாவை உலக நாடுகள் பார்க்கிறது. 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற நான் 24 மணி நேரமும் பாடுபட்டு வருகிறேன். காங்கிரஸ் கடந்த 60 ஆண்டுகளில் ஆட்சியில் வெறும் 3 கோடி வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கி இருக்கிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் எனது அரசு 14 கோடி வீடுகளுக்குக் குழாய் நீர் இணைப்புகளை வழங்கியுள்ளது" என்றார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!