சொந்தஊர் தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எம்ஆர்கேபி எச்சரிக்கை
மத்திய அரசு அண்மையில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தது. அத்துடன், இதன் பலன்களை மக்கள் அனுபவிக்க, மாநில அரசுகளையும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அறிவுறுத்தியது. எனினும், தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், 72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை, தமிழக அரசு குறைக்கவில்லை எனில், சென்னை கோட்டையை முற்றுகையிடுவோம் என்று கூறினார்.
இதற்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கடைவீதியில் திமுக அரசின் ஒரு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், " இது திமுக ஆட்சி. சொன்னதை செய்து காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" என்றார்.
"அண்ணாமலையின் மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக அஞ்சாது. கர்நாடகத்தில் உள்ள அரசுக்கு சல்யூட் அடித்த அண்ணாமலை சொந்த ஊரான கரூர் மாவட்டத்தையே தாண்ட முடியாது. இவர் தமிழகத்துக்கு என்ன செய்யப் போகிறார். மதக்கலவரத்தை உருவாக்க பார்க்கிறார் அண்ணாமலை. இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. சவாலுக்கு பயப்பட மாட்டோம்" என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu