அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தனது துறை பற்றி ஒன்றும் தெரியவில்லை - செல்லூர் ராஜு தகவல்
முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், மதுரையில் கொரானாவால் தற்போதும் அசாதாரண சூழ்நிலை தான் உள்ளது. தடுப்பூசி போடுவதில் மக்கள் ஆர்வமாக இருந்தாலும், எப்போது தடுப்பூசி கிடைக்கும் என மக்களுக்கும் தெரியவில்லை. மாவட்ட ஆட்சியருக்கும் தெரியவில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியவில்லை. மக்கள் தினந்தோறும் அலைந்து வருகின்றனர். இதனை வண்மையாக கண்டிக்கிறோம். தடுப்பூசி குறித்த சரியான அறிவிப்புகளை மாநில அரசு வெளியிடவில்லை.
இரண்டாம் டோஸ் போடுபவர்களுக்கான தடுப்பூசியூம் இல்லை. முதல் டோஸ் தடுப்பூசியும் இல்லை.முதல்வர் முகக்கவசம் எப்படி போடுவது என கூறுகிறார். ஒருவருடத்திற்கு முன்பே முகக்கவசம் போட மக்களுக்கு தெரியும். தடுப்பூசி வாங்குவதில் சாணக்கியத்தனமாக பெற வேண்டும் என்ற நிலையை மக்களும், அதிமுகவும் எதிர்ப்பார்க்கின்றனர். தமிழக அரசு தடுப்பூசிகளை அதிகமாக பெற வேண்டும்.
தடுப்பூசி செலுத்த வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் தடுப்பூசி இல்லை என கூறப்படுகிறது. தடுப்பூசிகளை பெற முதல்வரும், அமைச்சர்களும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெல்லிக்கு போயிருக்கலாம். தடுப்பூசியை கேட்டு வாங்கியிருக்கலாம். தடுப்பூசி பெற நடவடிக்கை எடுக்காமல் சோத்தால் அடித்த பிண்டங்களை போல திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். கொரானாவால் இறந்தவர்களுக்கு பிரதமர் பத்து லட்சம் அறிவித்தார். முதல்வர் ஐந்து லட்சம் அறிவிக்கிறார். ஆனால் ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என சொன்னவர் ஸ்டாலின்.
கொரானாவால் இறந்தவர்களுக்கு சான்றிதழ் அளிக்க மறுக்கின்றனர். என் தொகுதியிலேயே நிறைய பேருக்கு இறப்பு சான்றிதழ் கொடுக்கவில்லை. என் தொகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரானாவால் இறப்பவர்களுக்கு காரணம் போட முடியாது என கூறப்படுகிறது. அரசு இராஜாஜி மருத்துவமனையில் பலகை வைக்கப்பட்டுள்ளது. எப்படி 5 லட்சம் கொடுக்க முடியும். என்ன ஆட்சி இது. துக்ளக் ஆட்சியா?. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். கொரானாவால் இறந்தவர்களின் இறப்புச்சான்றிதழில் இறப்புக்கான காரணம் இடம்பெறாது என அரசு மருத்துவமனையில் போர்டு வைத்துள்ளனர்.
கொரானாவால் இறந்தவர்களின் இறப்புச்சான்றிதழ் விவகாரத்தில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்.5 லட்சம் கொடுப்பேன் என சொல்லிவிட்டு இறப்புக்கான காரணம் போடவிட்டால் எப்படி பணத்தை மக்கள் பெற முடியும். ஐ.பெரியசாமிக்கு இன்னும் துறையை பற்றியே ஒன்றும் தெரியவில்லை. அவர் விருப்பம் இல்லாமல் அத்துறையில் உள்ளார். அந்த துறையை ஏற்றுக்கொள்ளவில்லை. மனவெறுப்பில் உள்ளதாக கூறுகின்றனர். இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே கூட்டுறவு துறையை கணினி மயமாக்கி உள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் கணினி மயமாக்கப்பட்டு அனைத்து கடன் விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ன கடன், யார் வாங்கியது என்ற விவரங்கள் உள்ளது. தவறு செய்தவர்கள் மீது அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பயிர்க்கடன் இல்லாதவர்களுக்கு தள்ளுபடி செய்ய முடியாது. யார் எங்கேயும் தவறு செய்ய முடியாது. 1988 விலக்கு பெற்று ஒவ்வொரு கூட்டுறவுத்துறை தேர்தலும் நடைபெற்றது. தவறு செய்தவர்கள் கூட்டுறவுத்துறை தேர்தலில் நிற்க வழிவகைசெய்தவர் கலைஞர். நாங்கள் தில் விலக்கு பெறாமல் தேர்தலை நடத்தியது அதிமுக.
என் துறையை பற்றி பேசவும்,குறை கூறினால் அதற்கு பதில் சொல்லவும் நான் தயார். விவசாயிகளின் நண்பன் என திமுக நாடகம் மட்டுமே ஆடுவார்கள். கோடிக்கணக்கில் விவசாய பயிர்க்கடன்களை கொடுத்தது அதிமுக. கொரானா நேரத்திலும் கடன்களை அள்ளிக்கொடுத்தது அதிமுக. 9189 கோடி கொரானா நேரத்திலும் கடனாக கொடுத்துள்ளோம். கூட்டுறவு சங்கங்ளை திறம்பட நடத்தி வங்கிகளின் டெபாசிட்டை உயர்த்தினோம். ஒரு குறையை பற்றி குறை சொல்லும் போது தெரிந்து கொண்டு பேச வேண்டும் என கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu