மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோவின் தியாகப் பெருநாள் வாழ்த்து
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
20.05.2021
தியாகப் பெருநாள் வாழ்த்து தெரிவித்து மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுளார். இது குறித்த அறிக்கையில்
ஈதுல் அல்ஹா என்னும் ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று உலகெங்கும் உவப்புடன் கொண்டாடப்படுகின்றது. தன் ஒரே பிள்ளை என்றும் பாராமல் மூன்று முறை கனவில் கண்டதையே இறைவனின் கட்டளை என்று கருதி, தள்ளாத வயதில் பெற்றெடுத்த இஸ்மாயிலை, நபி இப்ராகீம் (அலை) பலியிட முன்வந்த தியாகம் இன்றவும் உலகெங்கும் நினைவுகூரப்படுகின்றது. இந்த நிகழ்வு இஸ்லாமிய வரலாற்றின் திருப்புமுனையாக நடைபெற்றது ஆகும்.
நிறம், சாதி, மொழி, இனம், தேசம் என்ற வரம்புகளைத் தகர்த்து, 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்ற உணர்வுடன், அரபா பெருவழியில் மானுட சமுத்திரமாக மக்கள் சங்கமித்து, வழக்க வழிபாடுகளில் திளைத்திருக்கும் மகோன்னதம் இன்று அரங்கேறுகிறது; ஈகை உணர்வால், வையகத்தை அய்யமின்றி வாகை சூடலாம் என்று அறிவிக்கின்றது.
தமிழ்நாட்டில் காலங்காலமாக உறவுமுறை கூறி, உணர்வுபூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம் பெருமக்கள், இந்நாளில் சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் ஆகும்.
மதச்சார்பின்மைதான் இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்கின்ற அரணாகும். அதனைத் தகர்பதற்கு அராஜக சக்திகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசே பக்க பலமாகச் செயல்படுவது இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைத்து, விபரிதமான விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே மதச் சார்பின்மையைக் காக்கவும், சமய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் அனைவரும் உறுதிகொள்வோம்.
இந்த உணர்வையும், உறவையும் மேலும் செழித்தோங்கச் செய்யச் சூளுரைத்து, இஸ்லாமியப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu