‘இன்னும் பல அமைச்சர்கள் சிறைக்கு போவார்கள்’- எடப்பாடி பழனிசாமி கணிப்பு
எடப்பாடி பழனிசாமி.
இன்னும் பல தி.மு.க. அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கடந்த 2006- 2011 தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.75 கோடி சொத்து சேர்த்தாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் அவரை விடுதலை செய்த போதிலும், லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2017இல் அவருக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.
இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றவாளி என்று கடந்த 3நாட்களுக்கு முன்பு தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், தண்டனை விவகாரம் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ரூ. 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியது.
இதற்கிடையே அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பொன்முடிக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை குறித்து கூறி இருப்பதாவது:-
இப்போது ஒரு சில அமைச்சர்கள் கைதாகி உள்ளே சென்றுள்ளனர். இன்னும் நிறைய அமைச்சர்கள் உள்ளே போக உள்ளனர். தி.மு.க. அரசில் இடம்பெற்றிருந்த 2 அமைச்சர்கள் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் எத்தனை பேர் கைது செய்யப்படுவார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட அரசு என்றால் இந்தியாவிலேயே அது தி.மு.க. அரசு மட்டும் தான் என்பது அனைவருக்கும் தெரியும். தி.மு.க. அரசு சாதனை செய்தது ஊழலில் மட்டும்தான். அனைத்து இடங்களிலும் கமிஷன், கரப்சன். இதுதான் அவர்களின் தாரக மந்திரம். அ.தி.மு.க. அரசு கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியைப் பொதுமக்களுக்குக் கொடுத்தது. ஆனால், தற்போதுள்ள அரசு தமிழகத்தைப் படுபாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது. கடந்த 2.5 ஆண்டுகளில் நாம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
வானிலை ஆய்வு மையம் சென்னையில் அதிக கனமழை பெய்யும் என்று ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரித்தது. ஆனால், தற்போதுள்ள அரசு அந்த அறிவிப்பைப் பொருட்படுத்தவே இல்லை. சரியான நேரத்தில் இந்த அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், சென்னை மக்கள் இந்தளவுக்குத் துன்பத்திற்கு ஆளாகி இருக்க மாட்டார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, பருவமழை தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும். 1300 மின்மோட்டார்கள் வாங்கப்பட்டு, தாழ்வான இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டது. ஒவ்வொரு வார்டுகளிலும் அம்மா உணவகம் மூலம் தரமான உணவு வழங்கப்பட்டது. ஆனால் தற்போதுள்ள அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. அம்மா உணவகத்தையும் கூட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மூடிவிட்டார்கள்.
இப்போதும் அதே தான் நடந்துள்ளது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இந்த முறையும் வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கையைத் தமிழ்நாடு அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் தான் இப்போது தென்தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் பல இடங்களில் மழை நீர் சுமார் 10 அடி வரை தேங்கியுள்ளது. இதனால் மக்கள் கடும் துன்பத்தைச் சந்தித்து வருகிறார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை.
தூத்துக்குடிக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள் தங்களைச் சந்திக்க எந்த அமைச்சரும் வரவில்லை என்று வேதனையுடன் கூறினார்கள். தி.மு.க. அரசு செயலற்ற அரசாக இருக்கிறது. இந்தியா கூட்டணியே இப்போது குழப்பத்தில் உள்ளது. அடுத்த கூட்டம் நடக்குமா? இல்லையா? என்பது கூட தெரியாத நிலை தான் அங்கே இருக்கிறது. அந்த கூட்டணியில் உள்ள ஒருவர் இந்தியில் பேச வேண்டும் என்று கூறுகிறார். வெவ்வேறு கருத்துக்களைக் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைப்பது நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகிறாகவே இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu