மா சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு!

X
மா சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு!

தமிழகத்தில் பிறந்த குழந்தைக்கு 1 மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டுவது 60.2 சதவீதமாக உயர்ந்துள்ளது, என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகத்தில், உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு நேற்று நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றபின், விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பச்சிளம் குழந்தை இறப்பு விகிதத்தை ஏறத்தாழ 20 சதவீதம் தடுக்கும் வல்லமை வாய்ந்தது தாய்ப்பால். மேலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புகளை 13 சதவீதம் தடுக்க இது உதவியாக இருக்கிறது என மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். வயிற்றுப்போக்கால் ஏற்படும் இறப்பிற்கான வாய்ப்புகளை தாய்ப்பால் 11 மடங்கு குறைக்கிறது. நிமோனியா மூலம் இறக்கும் வாய்ப்புகளை 15 மடங்கு குறைக்கிறது. குழந்தைகளின் மூளை வளர்ச்சியை தாய்ப்பால் அதிகப்படுத்துகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை தேசிய குடும்ப கணக்கெடுப்பின்படி 2016-17ம் ஆண்டுகளில் பிறந்த குழந்தைக்கு 1 மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டும் விகிதம் என்பது 54.7ஆக இருந்தது. அது 2020-21ம் ஆண்டு 60.2 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. ஆக குழந்தை பிறந்த 1 மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டும் விகிதம் என்பது தொடர்ந்து இன்றைக்கு அதிகரித்து வருவது என்பது தாய்பபால் விழிப்புணர்வுகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

அதேபோல் 6 மாதத்திற்கு தொடர்ச்சியாக தாய்ப் பாலூட்டும் சதவீதம் என்பது 48.3 ஆக இருந்தது. அது 2020-21க்கு பிறகு 55.1 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த ஆண்டை பொறுத்தவரை உலக தாய்ப்பால் வாரத்திற்கான கருத்துரு என்பது, தாய்ப்பால் ஊட்டுதலில் உள்ள இடைவெளியை தவிர்ப்போம், தாய்ப்பால் ஊட்டுதலை ஆதரிப்போம் என்பதாகும். இன்று முதல் 7ம் தேதி வரை தமிழ்நாட்டில் அனைத்து மருத்துவமனைகளிலும் உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!