தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் மலரும் தாமரை: புதிய கருத்துக்கணிப்பு முடிவு

தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் மலரும் தாமரை: புதிய கருத்துக்கணிப்பு முடிவு
X
தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என புதிய கருத்துக்கணிப்பு முடிவு சொல்கிறது.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக 5 இடங்களை கைப்பற்றும் என நியூஸ் 18 - சி.என்.என் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவை விட பாஜக தமிழ்நாட்டில் அதிக இடங்களில் வெல்லும் எனத் தெரிவித்துள்ளது நியூஸ் 18 போல் ரிசல்ட்.

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதையொட்டி, தேர்தல் களம் களைகட்டியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், திமுக தலைமையிலான 'இந்தியா' கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது. இவற்றை தவிர, நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளது.

இந்நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை பல்வேறு நிறுவனங்கள் நடத்தியுள்ளன. முன்னணி செய்தி ஊடகமான நியூஸ் 18 - சி.என்.என் இணைந்து நாடு முழுவதும் தேர்தல் கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. நியூஸ் 18 கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் INDIA கூட்டணி 30 இடங்களைக் கைப்பற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மக்கள் நீதி மய்யம், கொமதேக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இருக்கும் INDIA கூட்டணி 30 இடங்களில் வெற்றி பெறும் என நியூஸ் 18 கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 5 இடங்களில் பாஜகவும், 4 இடங்களில் அதிமுக கூட்டணியும் வெற்றி பெறும் என நியூஸ் 18 கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பல்வேறு கணிப்புகளில் திமுக 36க்கும் அதிகமான இடங்களை வெல்லும் என கணிக்கப்பட்ட நிலையில், நியூஸ் 18 கணிப்பு பாஜக 5 இடங்களில் வெல்லும் எனக் கணித்துள்ளது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை விட பாஜக அதிக இடங்களில் வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை, திமுக கூட்டணி 51 சதவீத வாக்குகளையும், பாஜக கூட்டணி 13% வாக்குகளையும், அதிமுக 17 % வாக்குகளையும் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக அணியை விட குறைவான வாக்கு சதவிகிதத்தைப் பெற்றாலும் கூடுதலாக 1 சீட்டில் வெல்லும் என்கிறது நியூஸ் 18 கருத்துக்கணிப்பு ரிசல்ட்.

மேலும், தமிழ்நாட்டின் எந்தெந்த மண்டலங்களில் பாஜக வெல்லும் என்றும் இந்தக் கணிப்பில் விரிவாக அலசப்பட்டுள்ளது. அதன்படி, காவிரி டெல்டா பகுதியில் 1 இடத்திலும், சென்னை மண்டலத்தில் 2 தொகுதிகளிலும், மேற்கு மண்டலத்தில் 2 தொகுதிகளிலும் என மொத்தமாக 5 இடங்களை பாஜக வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளை திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது. தேனி மக்களவை தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை பாஜக 5 இடங்களில் வெல்லும் என நியூஸ் 18 தேர்தல் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வாக்கு சதவீத வளர்ச்சி பெற்று இருக்கிறது என்பதில் ஐயப்பாடு இல்லை. ஆனால் ஐந்து தொகுதிகளில் வெற்றி பெறும் அளவிற்கு உள்ளதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி