மேகதாதுவில் அணை கட்ட வரிந்து கட்டும் குமாரசாமி: தூக்கத்தை கலைக்குமா தமிழக அரசியல் கட்சிகள்
கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே கட்ட திட்டமிட்டுள்ள மேகதாது அணைக்கட்டின் மாதிரி வடிவம்.
மேகதாதுவில் அணை கட்ட வரிந்து கட்டிக் கொண்டிருக்கிறார் மத்திய அமைச்சர் குமாரசாமி. அவர் இவ்வாறு எடுத்து வரும் நடவடிக்கைகள் தமிழக அரசியல் கட்சியின் தூக்கத்தை கலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்துள்ளது. தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் முழு ஆதரவுடன் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்ந்து உள்ளார்.
பிரதமர் மோடி பதவியேற்ற போதே நிச்சயமாக இந்த அரசு இந்த இரண்டு கட்சிகளுக்கும் முழு சலுகைகள் கொடுக்கும் என அரசியல் நோக்கர்களால் விமர்சிக்கப்பட்டது. அது உண்மை என்று நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பீகாருக்கும், ஆந்திராவுக்கும் தான் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கடுமையான பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.
மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாரதிய ஜனதா அரசுக்கு நமது அண்டை மாநிலமான கர்நாடகாவின் ஜேடிஎஸ் எனப்படும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் ஆதரவு அளித்துள்ளது. அந்த கட்சிக்கு நான்கு எம்பிக்கள் அம்மாநிலத்தில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் குமாரசாமி கவுடா மத்திய அமைச்சராக இருக்கிறார். அவருக்கு மத்திய தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு நான்கு இடங்கள் உள்ளன. இதன் காரணமாக இந்த இரண்டு கட்சிகளும் தற்போது ஒன்று சேர்ந்து கைகோர்த்து காங்கிரஸ் அரசை வீழ்த்துவதற்கு திட்டம் தீட்டி வருகிறார்கள்.
இதன் ஒரு கட்டமாக கர்நாடகா காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா மீது பல்வேறு ஊழல் புகார்களை கூறி வருகிறார்கள்.அவர் பதவி விலக கோரி அம்மாநில பாரதிய ஜனதா கட்சியும் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் சேர்ந்து பாதயாத்திரை தொடங்கி இருக்கிறார்கள். இந்த பாதயாத்திரையின்போது காவிரியின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக குமாரசாமி பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டி தமிழக விவசாயிகளின் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சுவது போல் உள்ளது. ஏனென்றால் மேகதாதுவில் அணை கட்டினால் நிச்சயமாக தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. குமாரசாமி மத்திய மந்திரி ஆக இருப்பதால் அணையை கட்டியே தீருவேன் என உறுதி பூண்டு உள்ளார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் என்ன கூறியிருக்கிறார் என பார்ப்போமா?
மேட்டூர் அணை ஒரே வாரத்தில் நிரம்பிள்ளது. உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. இப்படி வங்காள விரிகுடா கடலில் வீணாக கலக்கும் உபரி நீரை சேமிக்க உதவும் மேகதாது திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் அனுமதியை பெறுவதற்கு பிரதமர் மோடியை கர்நாடகாவை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிகள் வற்புறுத்துவார்கள். பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக மோடியை சமாதானம் செய்வோம். கர்நாடகாவை சேர்ந்த மற்ற மத்திய அமைச்சர்களுடன் இணைந்து இந்த பிரச்சனையை பிரதமரிடம் எடுத்துரைப்போம்.
எங்களின் நியாயமான தண்ணீரை பெறுவது தொடர்பாக லோக்சபாவில் பேசுவதற்கு இந்த முறை கர்நாடக மக்கள் பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளுக்கு ஓரளவு பலம் கொடுத்துள்ளனர். கர்நாடகாவுக்கு உரிய தண்ணீர் பங்கை பெற்று தரவும் நியாயம் கிடைக்கவும் பிரச்சனைகளை தீர்க்க நேர்மையாக பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் காங்கிரஸ் தலைவர்களுக்கு தைரியம் இருந்தால் அவர்கள் தமிழகத்திற்கு சென்று முதல்வர் ஸ்டாலினுடன் பேசி மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க அவரை சமாதானப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மத்திய மந்திரி குமாரசாமியின் இந்த பேட்டிக்கு தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பினாலும் தமிழக அரசியல் கட்சிகள் இன்னும் தங்களது தூக்கத்தை கலைத்ததாக தெரியவில்லை. குறிப்பாக திமுக வாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியான அதிமுகவாக இருந்தாலும் சரி, இதரக் கட்சிகளும் தங்களது தூக்கத்தை கலைத்து காவிரியின் குறுக்கே மேகதாதுவில்அணை கட்டுவதற்கு எதிராக பெரிய போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதே தமிழக விவசாயிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu