தமிழகத்தில் பணத்திற்கு மயங்காத 8 சதவீத வாக்காளர்களுக்கு பாராட்டு
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த வெற்றி திமுக தலைமைக்கும் அதன் கூட்டணி கட்சி தலைமைகளுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கவில்லை.வெளியில் அவர்கள் மகிழ்ச்சியாக பேட்டி அளித்தாலும் உள்ளுக்குள் ஒருவித அச்ச உணர்விலேயே இருக்கிறார்கள். இதற்கு காரணம் திமுக தலைமையிலான இந்த அணி வென்று இருப்பது உண்மையான வெற்றி அல். வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் அவர்கள் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் அதிமுக பாரதிய ஜனதா மற்றும் இதர கட்சியின் வாக்குகள் சிதைந்து போனதால் திமுக கூட்டணி வெற்றி பெற்று இருப்பதாகவே மக்கள் கருதுகிறார்கள்.
இதனை நிரூபிக்கும் வகையில் பல தொகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுகளை கூட்டினாலே பல திமுக கூட்டணி வேட்பாளர்கள் மண்ணை கவ்வி இருப்பார்கள். அதுவும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் வெறும் 5 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் தோல்வியை தழுவி இருக்கிறார். இப்படி பல தொகுதிகளில் நிலைமை உள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பலரும் எதிர்பார்த்தபடி திமுக கூட்டணி எல்லா இடங்களிலும் வெற்றி கொண்டு இருக்கிறது. எதிர்ப்பு ஓட்டுகள் மூன்றாக பிரிந்த நிலையில் திமுக தனது கூட்டணி ஓட்டு வாங்கியால் இந்த வெற்றியை பெற்றிருக்கிறது என்பது ஊரறிந்த ரகசியம். அதையும் தாண்டி இந்த தேர்தலில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டென்றால் அது திமுக அணியை எதிர்த்த பிரதானமான மூன்று கட்சிகளின் நிலை தான்.
தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியான அதிமுக மூன்றாக பிளவுபட்டாலும் அது இரண்டாவது பெரிய கட்சியாக தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அடுத்து 2019 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த போதே 3.62% ஓட்டுகளை மட்டுமே பெற்ற பாஜக இந்த தேர்தலில் பாமகவை தவிர பெரிய ஓட்டு வாங்கிக் கொண்ட கட்சி எதுவும் இல்லாத ஒரு கூட்டணியில் தனித்து 11.21% எட்டிப் பிடித்திருக்கிறது. 2014 இல் நாடு முழுவதும் வீசிய காங்கிரஸ் எதிர்ப்பு, தமிழகத்தில் 2ஜி ஊழல் காரணமாக திமுக மீது இருந்த எதிர்ப்பு, குஜராத் மாடல் வளர்ச்சியின் அடையாளமான நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர் என பல சாதகமான அம்சங்கள் நிறைந்த தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி வாங்கிய அதே 18 சதவீத ஓட்டை இந்த முறை பெரிய கூட்டணி பலம் எதுவும் இல்லாமல் தமிழக பாஜக பெற்றிருக்கிறது.
அதிலும் அதிமுக கூட்டணிக்கும் பாஜக அணிக்கும் இடையிலான ஓட்டு சதவீதம் 5% தான். இது பாஜகவுக்கு மிகப் பெரிய நல்ல செய்தி அடுத்து இந்த தேர்தலில் திரும்பி பார்க்க செய்த ஒரு கட்சி என்றால் அது சீமானின் நாம் தமிழர் கட்சி தான்.
மத்தியில் ஆட்சி அமைக்கவோ, கூட்டணியில் இடம் பெறவோ வாய்ப்பே இல்லை. பணபலம், பிரச்சார பலம் எதுவும் இல்லை, வெற்றி என்பதற்கு வாய்ப்பு இல்லை, கடைசி நேரத்தில் மாறிய சின்னம் என எல்லா பாதகங்களையும் தாண்டி அந்த கட்சி தனது ஓட்டு வங்கியை 8 சதவீதமாக உயர்த்தியிருக்கிறது.
நாம் தமிழர் கட்சி வாங்கிய ஓட்டு என்பது பணம், பரிசுக்கு மயங்காத வாக்காளர்கள் இன்னமும் தமிழகத்தில் இருக்கின்றனர் என்பதை காட்டுகிறது. அதிமுக இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டதும், பாஜக மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்திருப்பதும், தமிழகத்தில் திமுக மீதான அதிருப்தி வளர்ந்திருப்பதை காட்டுகிறது என்றால் பாஜக கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் வாங்கிய ஓட்டு சதவீதத்தை கூட்டினால் அது அதிமுக கூட்டணி ஓட்டு விகிதத்தை தாண்டுகிறது .
அதாவது எங்களுக்கு திமுக வேண்டாம், அதிமுக வேண்டாம் என்ற சக்தி தமிழகத்தில் இரண்டாவது பெரிய சக்தியாக இருக்கிறது என்பதுதான் லோக்சபா தேர்தல் தமிழகம் மக்களுக்கு சொல்லும் பாடம். அந்த வகையில் பரிசு பணத்திற்கு ஆசைப்படாமல் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த ௮ சதவீத வாக்காளர்களும் நியாயவான்கள், பாராட்டுக்குரியர்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu