கோலாகலமாக நடந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி ஏற்பு விழா
சித்தராமையா பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற தலைவர்கள்.
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா பதவியேற்பு விழா மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
கடந்த பத்தாம் தேதி கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. 12ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது. பொதுவாக கர்நாடக மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை இல்லை அல்லது பார்டரில் வெற்றி என்கிற நிலைமை தான் இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது சுமார் 34 ஆண்டுகளுக்கு பின்னர் 224 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை பெற்று இமாலாய வெற்றி அடைந்திருப்பது கட்சிக்கு புதிய புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் மட்டும் இன்றி ஒட்டுமொத்த இந்தியா முழுவதுமே காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களும் தொண்டர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனாலும் அந்த மகிழ்ச்சிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் முதல்வர் பதவி யாருக்கு வழங்குவது என்பதில் சித்தராமையாவுக்கும் டி. கே. சிவகுமாருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.
அதன் பின்னர் கட்சி மேலிடம் சமாதானம் செய்து சித்தராமையா இரண்டரை ஆண்டுகளுக்கு முதலமைச்சராக பதவியில் நீடிப்பது என்றும் அதன் பின்னர் டி. கே. சிவக்குமாருக்கு முதல்வர் பதவி வழங்குவது என்றும் அதுவரை சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதனை இரு தலைவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து பெங்களூரு கண்டீரவா ஸ்டேடியத்தில் நேற்று மதியம் முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் சித்தராமையா கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் தாவர் சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் துணை முதல்வர் டி. கே. சிவகுமார் மற்றும் எட்டு அமைச்சர்களுக்கும் கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற இந்த விழா மாநில சட்டமன்றத் தேர்தல் வெற்றி விழா மட்டும் இன்றி அகில இந்திய அளவிலான ஒரு வெற்றி விழா போல் காணப்பட்டது. காரணம் விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர்கள் அசோக்கெலாட்(ராஜஸ்தான்) சுக்விந்தர் சிங் கூகூ (இமாச்சலப் பிரதேசம்) பூபேஷ் பாகில் (சத்தீஸ்கர் )மற்றும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் ,ஜார்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன். மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரி கமல் நாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் எச்சூரி, தமிழகத்தின் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முக்தி என நாட்டின் முக்கிய தலைவர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவில் சுமார் 50,000 க்கும்மேற்பட்ட கட்சியின் தொண்டர்களும் கலந்து கொண்டனர் . காண்டீரவா ஸ்டேடியம் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. விழாவில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு காங்கிரஸ் தொப்பி வழங்கப்பட்டது. மொத்தத்தில் இந்த விழா மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu