உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து காஷ்மீர் மகாராஜா மகன் கரண்சிங் கருத்து

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து காஷ்மீர் மகாராஜா மகன் கரண்சிங் கருத்து
X
காஷ்மீர் முன்னாள் மகாராஜா மகன் கரண்சிங்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து காஷ்மீர் முன்னாள் மகாராஜா மகன் கரண்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜம்மு காஷ்மீர் மக்களில் ஒரு பகுதியினருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் மகனும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஜனாதிபதியுமான மூத்த காங்கிரஸ் தலைவர் கரண் சிங் தெரிவித்துள்ளார்.

1947-ம் ஆண்டு நாடு விடுதலை அடைந்த ஜம்மு காஷ்மீர் சுதந்திரமான பகுதியாக மகாராஜா ஹரிசிங் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. ஆனால் பாகிஸ்தான் போர் தொடுத்து நெருக்கடி கொடுத்தது. ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியையும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டது. இதனால் ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ள மகாராஜா ஹரிசிங் ஒப்புக் கொண்டார். அப்போதுதான் ஜம்மு அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

இந்த 370-வது பிரிவை 2019-ல் மத்திய அரசு ரத்து செய்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவுடன் இணைந்துவிட்ட ஒருங்கிணைந்த பகுதி; சிறப்பு அந்தஸ்து வழங்கக் கூடிய 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என இன்று தீர்ப்பளித்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலத்தை 2 ஆகப் பிரித்து லடாக் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது சரியானதுதான். தற்போதைய ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு விரைவில் மாநில அந்தஸ்து தர வேண்டும்; ஜம்மு காஷ்மீருக்கு 2024-ம் ஆண்டு செப்டம்பருக்குள் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு குறித்து காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த மகாராஜா ஹரிசிங் மகனும் 1952-ம் ஆண்டு முதல் 1965-ம் ஆண்டு வரை 370-வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் ஜனாதிபதியாக இருந்தவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கரண் சிங் கூறியதாவது:-

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜம்மு காஷ்மீர் மக்களில் ஒரு பகுதியினருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. இருந்தபோதும் அனைவரும் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஏற்றுத்தான் ஆகவேண்டும். அதனை தவிர்த்துவிட முடியாது. தேவையில்லாமல் தலையை சுவற்றில் முட்டிக் கொண்டிருக்கவும் வேண்டாம். அடுத்த தேர்தலுக்கு தயாராவோம். அதை நோக்கி பயணிப்போம்.

இவ்வாறு கரண் சிங் கூறினார்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....