மக்களவை தேர்தல்: கனிமொழியின் கமெண்ட்டும்! தமிழிசையின் பதிலடியும்!

மக்களவை தேர்தல்: கனிமொழியின் கமெண்ட்டும்! தமிழிசையின் பதிலடியும்!
X
தென்சென்னை தொகுதியில் தமிழிசை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு கனிமொழி தெரிவித்த கருத்துக்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்

தென்சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். பா.ஜனதா சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.

இன்று தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.யை ஆதரித்து திருவான்மியூரில் கனிமொழி எம்.பி. வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு மாநில கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்த தொகுதியில் (தென்சென்னை) போட்டியிடுகிறார். அந்த கட்சியில் வேட்பாளர்கள் இல்லை. ஆகவே இரண்டு மாநில கவர்னர்களை ராஜினாமா செய்ய வைத்து, தேர்தல் களத்தில் பா.ஜனதா களம் இறக்கிவிட்டுள்ளது.

கடந்த முறை தூத்துக்குடி தொகுதியில் இருந்து போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்த நிலையில் கவர்னர் ஆனார். இந்த முறை பரிதாபம், அவர் தோல்வியடைந்த பிறகு கவர்னர் ஆக முடியாது, ஏனென்றால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க போகிறது. கச்சத்தீவு பிரச்சனை பற்றி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஒருபோதும் பேசியது கிடையாது. தேர்தல் நெருங்கிய நிலையில், அவர்கள் அதைப் பற்றி பேசுகிறார்கள் என்றார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழிசை சவுந்தராஜன் கூறியதாவது:-

தயது செய்து உங்களுடைய எம்.பி. பதவியின்போது செய்த சாதனைகள் சொல்லுங்கள் என கனிமொழியிடம் கேட்க விரும்புகிறேன். நான் ஆளுநராக நீடிப்பதா? அல்லது வேட்பாளராக போட்டியிடுவதா? என்று நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். நீங்கள் பதட்டம் அடைகிறீர்கள்.

அவர்களுக்கு (திமுக) தேர்தலில் போட்டியிடக்கூடிய கட்சிக்காரர்கள் இல்லையா?. அவர்களுடைய சொந்த உறவினர்களுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கியுள்ளனர். எங்களுடைய கட்சியில் சாதாரண தொண்டனும் இந்த அளவிற்கு வளர்ச்சி அடைய முடியும்.

எங்களுடைய கட்சியில் வேட்பாளர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 15 பேர் விருப்ப மனு செய்திருந்தனர். அந்த 15 பேரில் நான் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். திமுகவில் கனிமொழி மட்டுமே விருப்பமனு செய்திருந்தார். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai healthcare products