ராகுல் பாதயாத்திரையில் கமல்? கூட்டணிக்கு அச்சாரம்?

ராகுல் பாதயாத்திரையில் கமல்? கூட்டணிக்கு அச்சாரம்?
X
ராகுல்காந்தியில் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாதயாத்திரையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரத் ஜோடோயாத்திரா எனப்படும் இந்திய ஒற்றுமை என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களை கடந்த தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது.

யாத்திரையின் 100-வது நாள் நிறைவு விழா ராஜஸ்தானின் தௌசா பகுதியில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அவர் ராஜஸ்தானில் தனது பாதயாத்திரையை தொடர்ந்துமேற்கொண்டு வருகிறார். இவரது பாதயாத்திரை வெற்றியடைய பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல் சில கட்சி தலைவர்கள் இவரது பாதயாத்திரையில் பங்கேற்றும் வருகின்றனர்.

இந்த நிலையில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இது கூட்டணிக்கான அச்சாரமா?

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலைஎதிர்கொள்வது குறித்து மநீம ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், ராகுலின் பாதயாத்திரையில் கமல் கலந்து கொள்வார் என செய்தி வெளியாகியுள்ளது. இது காங்கிரஸ் கட்சியுடன் நாடாளுமன்ற தேர்தலுக்கான அச்சாரமாக இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதன் மூலம் திமுக, காங். மநீம கூட்டணியா? அல்லது காங்கிரஸ் கட்சி, மநீம போன்ற கட்சிகளுடன் மூன்றாவது அணியை அமைக்குமா என்பது போகப்போக தெரியும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!