தேர்தல் மோதல் வழக்கு: மார்ச் 7 வரை ஜெயக்குமாருக்கு நீதிமன்றக்காவல்
சென்னையில் கடந்த 19ம் தேதி நடந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது, ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட 49-வது வார்டு பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில், திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக தகவல் கிடைத்து, அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் அங்கு சென்றார்.
ஜெயக்குமார் அங்கு சென்றதும், தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே பிரச்சினை எழுந்தது. தி.மு.க.வை சேர்ந்த நரேஷ்குமார் (வயது 33) என்பவரை ஜெயக்குமார் மற்றும் அ.தி.மு.க.வினர் பிடித்தனர். பின்னர் அவரது சட்டையை கழற்றிய நிலையில் அழைத்துச் சென்று, போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இதனிடையே, நரேஷ்குமார், ஸ்டாலின் அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக சேர்ந்தார். அவர் அளித்த புகாரின் பேரில், ஜெயக்குமார் மற்றும் 40 பேர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், தமிழ்நாடு பொதுச்சொத்து சேதம் விளைவித்தல், பயங்கர ஆயுதங்கள் கொண்டு காயம் ஏற்படுத்தும் நடவடிக்கை உள்பட 15 சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டையார்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் வைத்து, ஜெயக்குமாரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். இதற்கு, அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், அவரை, லுங்கியுடன் போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.
இதை கண்டித்து, ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனிடையே, ஜார்ஜ் டவுன் 15வது குற்றவியல் நீதிமன்றத்தில், நேற்றிரவு ஜெயக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி முரளி கிருஷ்ணா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, மார்ச் 7 வரை நீதிமன்றக் காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயக்குமார் தரப்பில், ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu