அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ஐ.டி. ரைடு லீக் ஆனது எப்படி? என்பது பற்றி விசாரணை
தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனம் உட்பட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, திருவண்ணாமலை, கோவை, கரூர் என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எ.வ.வேலுவுக்கு சொந்தமான நிறுவனங்கள் மட்டுமல்லாது அவரது உறவினர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களிலும், நெருக்கமானவர்களின் வீடுகளிலும் வருமான வரித் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. அதோடு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் போன்ற பிரிவுகளையும் அமைச்சர் எ.வ.வேலு கவனித்து வருகிறார். அதனால் அது சார்ந்த ஒப்பந்ததாரர்கள் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமைச்சர் எ.வ.வேலுவின் மகன்கள் கம்பன், குமரன் ஆகியோர் தொடர்புடைய இடங்களிலும் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியிலும் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பியுமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டது வருமான வரித்துறை. அதே போல கடந்த ஜூலை மாதம் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. அதற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தி செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில் அவர் தற்போது சிறையில் உள்ளார்.
இந்நிலையில், இன்று நடைபெறும் இந்த வருமான வரித்துறை சோதனை பற்றிய தகவல் நேற்று இரவே லீக் ஆனதாக தகவல்கள் கசிந்துள்ளன. 3 வெவ்வேறு வழக்குகளில் இன்று ஒரே நேரத்தில் ஏராளமான இடங்களில் சோதனை மேற்கொள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் வந்து தங்கி இருந்தனர். இந்நிலையில், தமிழக அமைச்சர் வீட்டில் ஐ.டி சோதனை நடைபெறும் முன்பே இந்த ரெய்டு குறித்த தகவல் நேற்றே கசிந்ததாக கூறப்படுகிறது. இதனால், இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு சென்ற இடங்களில் பெரிதாக எந்த முக்கிய ஆவணங்களும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வருமான வரித்துறையினர், ரெய்டுக்கு முன்பே தகவல் வெளியானது எப்படி என விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 100 இடங்களில் ஐடி ரெய்டு நடத்த திட்டமிட்டு, நேற்றே, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் கூடியிருந்துள்ளனர். அது தொடர்பான தகவல் வெளியே கசிந்ததன் காரணமாக, இன்று அமைச்சர் தரப்பு உஷார் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், வருமான வரி சோதனை குறித்த தகவல் வெளியானது எப்படி என வருமான வரி துறை அதிகாரிகள் விசாரணை நடந்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu