நாடாளுமன்ற தேர்தலில் திருநாவுக்கரசருக்கு மீண்டும் சீட் கிடைப்பது கஸ்டம் தான்
திருநாவுக்கரசர் எம்.பி.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு15 சீட்கள் ஒதுக்க வேண்டும் என மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆனால் சமீபத்தில் வட மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்தியா கூட்டணியே கலகலத்து போய் உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் தி.மு.க.எப்படி காங்கிரசுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கும் என்பது கேள்விக்குறி தான். கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டதை விட குறைவாகவே ஒதுக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி சீட் குறைக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்.பி.க்கள் பலருக்கு மீண்டும் சீட் கிடைக்குமா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
இதன் காரணமாக சிட்டிங் காங்கிரஸ் எம்.பி.க்கள் பலரும் என்ன செய்வதென்று தெரியாமல் கைபிசைந்த நிலையில் உள்ளனர். அவர்களில் ஒருவர் திருநாவுக்கரசர் எம்.பி. ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க, பின்னர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க, அதன் பின்னர் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க. என தனி கட்சி, பின்னர் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்து ராஜ்யசபா எம்.பி, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், இறுதியாக காங்கிரசில் சேர்ந்து கட்சியின் மாநில தலைவர், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் என திருநாவுக்கரசரின் அரசியல் வாழ்க்கையானது பல கட்சியுடனான தொடர்பில் இருக்கிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே திருச்சி நாடாளுமன்ற தொகுதியானது முன்னாள் எம்.பி. அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிசுக்கு என உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தான் இறுதி கட்டத்தில் ராகுல் தலையிட்டதால் நிலைமை மாறி போனது.
இந்த நிலையில் தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சியில் மீண்டும் களமிறங்க விரும்பும் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், ஒரு வேளை அந்தத் தொகுதி கிடைக்காவிட்டால் ராமநாதபுரம் தொகுதியிலாவது களமிறங்கி விட வேண்டும் என காய் நகர்த்துகிறார்.
ராமநாதபுரம் தொகுதியை பொறுத்தவரை இந்த முறை தி.மு.க.வே நேரடியாக போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது. தி.மு.க. மாணவரணி தலைவர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி இதற்காக காய் நகர்த்தி வரும் வேளையில், திருநாவுக்கரசரும் ராமநாதபுரம் தொகுதி மீது ஒரு கண் வைத்திருக்கிறார். தாம் சார்ந்த முக்குலத்தோர் சமுதாய வாக்குகளும், காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிக்கும் சிறுபான்மை சமுதாயத்தினர் வாக்குகளும் தன்னை கரை சேர்த்துவிடும் எனக் கணக்குப் போடுகிறார் திருநாவுக்கரசர்.
திருச்சியில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதே திருநாவுக்கரசர் எம்.பி.யின் விருப்பம். 100க்கு 70 சதவீதம் திருச்சியை குறி வைத்து களப்பணிகளை தொடங்கியிருந்தாலும் கடைசி நேர அரசியல் மாற்றத்தால் எதுவும் நடக்கலாம் என்பதால், இப்போதே உஷாராக கூடுதலாக ராமநாதபுரம் தொகுதி பக்கமும் பார்வையை பதித்து வருகிறார் திருநாவுக்கரசர்.
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், தன்னை அரசியலில் அடையாளம் காட்டிய அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள் வருவது தான். அதுமட்டுமல்ல ராமநாதபுரம் தொகுதியில் ஏற்கனவே கடந்த 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் கூட்டணியின்றி தனித்து களம் கண்டு கணிசமான வாக்குகளை பெற்றவர் திருநாவுக்கரசர். எல்லாம் சரி, முஸ்லீம் லீக் நிலை என்ன என்ற கேள்வி எழுவது புரிகிறது.
அநேகமாக முஸ்லீம் லீக்கிற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி அல்லது மயிலாடுதுறை தொகுதி கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள திருநாவுக்கரசர் தனது சோர்ஸ்கள் மூலம் ராகுல் காந்தியின் நெருங்கிய வட்டத்திற்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu