தமிழகத்தில் நல்ல தலைவர் இல்லையா? விஜய்க்கு பதில் கொடுத்த அமைச்சர் வேலு
தமிழகத்திற்கு நல்ல தலைவர் வேண்டும் என்று விஜய் பேசிய நிலையில் இதற்கு அமைச்சர் எ.வ. வேலு பதில் அளித்தார். தமிழ்நாட்டில் நல்ல தலைவர் இருப்பதனால் தான் 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது என்று அமைச்சர் எ வ வேலு தெரிவித்துள்ளார். ஏற்கனவே இப்படித்தான் கருணாநிதி, ஜெயலலிதா இறந்தபிறகு வெற்றிடம் இருக்கு என்று பேசினார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியுள்ளார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் அதற்கு முன் கொள்கைகள், சின்னம் என படிப்படியாக வெளியிடுவோம் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு போலவே, தமிழ்நாட்டில் சட்டமன்றத் தொகுதி வாரியாக, 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகளை நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் வழங்கினார். சென்னை, திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் முன்பு உரையாற்றினார். அப்போது பேசிய விஜய், நல்ல தலைவர்கள்தான் தமிழ்நாட்டில் இல்லை. இன்னும் நமக்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகின்றனர்.
நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டுமா, வேண்டாமா? என விஜய் கேள்வி எழுப்பினார். அப்போது, அரங்கிலிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர். இதையடுத்து, உங்களது ஆர்வம் புரிகிறது, இப்போதைக்கு படியுங்கள், மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என விஜய் கூறினார். விஜய் இப்படி பேசியதற்கு பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
அந்த வகையில் அமைச்சர் எவ வேலு பதில் அளித்துள்ளார். "தமிழ்நாட்டில் நல்ல தலைவர் இருப்பதனால் தான் 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது என்றும், இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம் என்றும் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த போது அமைச்சர் எவ வேலு கூறி உள்ளார்.
அமைச்சர் எவ வேலு மேலும் கூறியதாவது:- ஏற்கனவே ஒரு முறை எல்லாரும் சொன்னாங்க.. கருணாநிதி, ஜெயலலிதா இறந்தபிறகு வெற்றிடம் இருக்கிறது. வெற்றிடம் இருக்கிறது என்று சொன்னார்கள். இதனை அரசியலில் சிலர் சொல்வாங்க.. வெற்றிடமே இல்லை என்று நாங்கள் சொல்லி வந்தோம். ஏனென்றால் இது ஜனநாயக நாடு. சிறந்த தலைவர், மக்களின் தேவையை புரிந்துகொண்ட தலைவர், மக்களுக்கு என்ன தேவையோ அதை அறிந்து செய்கின்ற தலைவர் தமிழ்நாட்டில் இருப்பதனால் தான் 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu