தி.மு.க. கூட்டணியில் சீட் உண்டா? வெளிநாட்டிற்கு பயணமாகிறார் கமல்ஹாசன்

தி.மு.க. கூட்டணியில் சீட் உண்டா? வெளிநாட்டிற்கு பயணமாகிறார் கமல்ஹாசன்
X
தி.மு.க. கூட்டணியில் சீட் உண்டா? என்பது உறுதியாகாத நிலையில் வெளிநாட்டிற்கு செல்ல கமல்ஹாசன் திட்டமிட்டு உள்ளார்.

திமுக கூட்டணியில் இதுவரை 2 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டிற்கு பயணம் செல்ல கமல்ஹாசன் திட்டமிட்டு உள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளும் கட்சியான திமுகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக தரப்பில் இதுவரை எந்தக் கட்சியுடனும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை.

திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. திமுக தொகுதி பங்கீட்டு குழுவில், டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், துணை பொதுச்செயலாளர் பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி, ஆகியோர் உள்ளனர். இவர்கள் தான் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். திமுக, 2 கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கிவிட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி என இதுவரை 2 சீட்களை ஒதுக்கியுள்ளது திமுக. இந்த 2 கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ராமநாதபுரம் தொகுதி ஐயூஎம்எல் கட்சி சார்பில் தற்போதைய எம்.பி நவாஸ் கனி மீண்டும் ஏணி சின்னத்தில் அங்கு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை நடத்துகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாளை இரண்டாம் கட்ட பேச்சுவாத்தை நடத்த உள்ளது. வரும் 27ஆம் தேதி அன்று திமுக - காங்கிரஸ் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து வரும் 28 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சி பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்ற பேச்சுகள் அறிவாலய வட்டாரத்தில் உலவி வருகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட கமல்ஹாசன், இந்த முறை திமுக கூட்டணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளித்தார் கமல். அதோடு, ராகுல் காந்தியின் யாத்திரையிலும் பங்கேற்றிருந்தார். எனவே, வரும் லோக்சபா தேர்தலில் கமல்ஹாசம் திமுக - காங்கிரஸ் அணியில் இணைவது நிச்சயம் எனக் கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கும் 'THUG LIFE' படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பிற்காக வரும் 29ஆம் தேதி வெளிநாடு செல்கிறார் கமல்ஹாசன். படப்பிடிப்பு முடிந்து மார்ச் 10ஆம் தேதி தான் சென்னை திரும்புவார். எனவே, அதற்கு முன்பாக 28ஆம் தேதிக்குள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்து விட்டு வெளிநாடு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவுடன் நேரடியாக கமல்ஹாசன் பேசாவிட்டால், காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படியும், இன்னும் 3 நாட்களுக்குள், மேலதிக தகவல்கள் கிடைக்கக்கூடும்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!