மத உணர்வை தூண்டும் பேச்சு: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

மத உணர்வை தூண்டும் பேச்சு: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
X
மத உணர்வை தூண்டும் வகையில் பேசுவதா என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் செல்வத்தைக் காங்கிரஸ் பறித்துக் கொள்ளும் என்று பிரதமர் மோடி கூறியது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அவர்கள் நாட்டின் உள்ள பொதுமக்கள் செல்வத்தைப் பறித்துக் கொள்வார்கள் என்றும் இதை காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையிலேயே கூறியுள்ளது என்றும் பேசியிருந்தார்.

பிரதமரின் இந்தப் பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தங்கள் தேர்தல் அறிக்கையில் இதுபோல எந்தவொரு கருத்தும் இல்லை என்று காங்கிரஸும் கூறி வருகிறது. இதற்கிடையே பிரதமரின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் "பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு மோசமானது, மிகவும் வருந்தத்தக்கது. தனது அரசின் தோல்விகளால் பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர் என்பதை உணர்ந்து, அதற்குப் பயந்து மோடி மத உணர்வுகளைத் தூண்டிவிட்டுள்ளார். தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே வெறுப்புப் பேச்சுக்களைப் பேசியுள்ளார். வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் உண்மையான உத்தரவாதம். பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு நடவடிக்கை எடுக்காமல்.. காது கேளாமல் இருப்பதைப் போலத் தேர்தல் ஆணையம் இருக்கிறது. தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கூட கைவிட்டுவிட்டது.

இந்தியா கூட்டணி உறுதியளித்த சமூக-பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது சமத்துவ சமுதாயத்தை உருவாக்க ஏற்பட்ட நீண்ட கால தாமதத்திற்கான ஒரு தீர்வாகும். பிரதமர் அதைத் திரித்துப் பேசியுள்ளார். சமூக ரீதியாகப் பின்தங்கியவர்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகள் மற்றும் பதவிகளில் உரியப் பங்கை வழங்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. பாஜகவின் வஞ்சகமான திசை திருப்பும் உத்திகள் குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மோடி அரசின் மோசமான தோல்விகளை அம்பலப்படுத்துவதில் நமது உறுதிப்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டு உள்ளார்.


Tags

Next Story
சென்னிமலை அருகே மதுபோதையில்  தூக்கிட்டு வாலிபர் தற்கொலை