ஹேமந்த் சோரன் கைது: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

ஹேமந்த் சோரன் கைது: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

இந்திய நாடாளுமன்றம் (கோப்பு படம்).

ஹேமந்த் சோரன் கைது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் சுரங்க நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. மத்திய அரசு மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்கள் லோக்சபா, ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்மாநில முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் இருந்தார். இவர் மீது நில சுரங்க முறைகேடு புகார் எழுந்தது. இதுபற்றிய விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையின்போது அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் தான் நேற்று முன்தினம் ராஞ்சியில் 7 மணிநேரம் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

விசாரணை முடிவில் அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரன தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். அதன்பிறகு புதிய முதல்வராக சாம்பை சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று பதவியேற்றார்.

இந்நிலையில் தான் ஹேமந்த் சோரன் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய பாஜக அரசு விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களின் செயல்பாட்டை முடக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. மேலும் பழிவாங்கும் அரசியலில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இத்தகைய சூழலில் தான் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின் 3வது நாள் கூட்டம் தொடங்கியது. அப்போது லோக்சபாவில் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட விவகாரம் எதிரொலித்தது. அதாவது மத்திய அரசு மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் சபை நடவடிக்கையை புறக்கணித்து லோக்சபாவை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

Tags

Next Story