சூடுபிடிக்கும் உள்ளாட்சித் தேர்தல் களம்: கட்சி தாவும் முக்கிய புள்ளிகள்

தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தென் மாவட்டங்களில் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.
தென்மாவட்டம் என்றாலே அது அதிமுகவிற்கு அதிக சதவீத வாக்குகளை உடையது. உள்ளாட்சி தேர்தலை மையப்படுத்தி சமீபகாலமாக அதிமுகவைச் சேர்ந்த பல முக்கிய புள்ளிகள் திமுகவில் இணைந்து வருகின்றனர். அதிமுக மாநில மகளிர் அணி செயலாளரும் முன்னாள் எம்பியுமான விஜிலா சத்தியானந்த், அதிமுகவைச் சேர்ந்த திருநெல்வேலி முன்னாள் மேயர் புவனேஸ்வரி, அதிமுகவைச் சேர்ந்த சங்கரன்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி, அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரும், தற்போதைய வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான குற்றாலம் குமார் பாண்டியன், தென்காசி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பானு, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ஷமீம், சிறுபான்மை பிரிவு சாந்தசீலன், குற்றாலம் கூட்டுறவு தலைவர் சுரேஷ் உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் தற்போது திமுகவில் ஐக்கியமாகி உள்ளனர்.
இதேபோல் தென்காசி மாவட்டத்திலுள்ள அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களது மாற்றம் அவர்களது சுயநலத்திற்காகவும், உள்ளாட்சியில் பதவி பெறுவது மட்டுமே. இவர்கள் சென்று விட்டால் அதிமுக இல்லை என்று ஆகி விடாது. அதிமுக தொண்டர்கள் அதிமுகவில் தான் இருப்பார்கள் இவர்களால் அதிமுகவிற்கு எந்த ஒரு இழப்பும் இல்லை என்று அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் நாங்கள் திமுகவின் அடிப்படையிலிருந்து வந்தவர்கள். உள்ளாட்சித் தேர்தலில் கட்சி எங்களுக்குதான் முன்னுரிமை அளிக்கும் என்று திமுக கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போது தான் தென் மாவட்ட அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதுவரை கட்சி மாறியவர்கள் தாங்கள் மட்டுமே சென்றுள்ளதாகவும், தங்களது ஆதரவாளர்கள் ஒருவரைக்கூட திமுகவிற்கு அழைத்துச் செல்லவில்லை. எது எப்படியோ இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் வந்துவிடும் அப்போதுதான் தெரியும் இவர்களது செல்வாக்கும், லட்சணமும் என்று டீக்கடையில் சாமானியன் ஒருவன் புலம்பிக் கொண்டு சொல்கின்றான்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu