விலையில்லா லேப்டாப் திட்டம்: ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

விலையில்லா லேப்டாப் திட்டம்: ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
X
எடப்பாடி பழனிசாமி.
விலையில்லா லேப்டாப் திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் பிளஸ் 2 மாணவர்கள் மிகவும் பயன் அடைந்து வந்தனர். பள்ளி படிப்பை முடித்து உயர் கல்விக்கு செல்லும்பாது மாணவர்களுக்கு இந்த லேப்டாப்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக இருந்த போதும் இந்த திட்டம் தொடர்ந்து மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட்டு வந்தது. ஸ்டாலின் தலைமையில் கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், மூன்று ஆண்டுகளாக முடங்கி உள்ள நிலையில், மாணவர்களுக்கு இந்த ஆண்டாவது வழங்கப்படுமா? என அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்ததாக கல்லூரிகளுக்கு செல்லும் போது அவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் 2011 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இந்த திட்டத்தினை மாணவர்களுக்காக அறிவித்தார். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக லேப்டாப் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு 2020 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அப்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை,.

இதையடுத்து பல பள்ளிகளில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அது மட்டுமல்லாமல் 2020-21, 2021-2022, 2022-2023ஆம் கல்வி ஆண்டுகளில் படித்து முடித்த பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை. இந்த கல்வியாண்டு முடிந்து அடுத்த கல்வியாண்டு ஜூன் 6-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் இதுவரை மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கவில்லை. இது தொடர்பாக தலைமையாசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களுக்கு மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் இலவச லேப்டாப்புகளை வழங்குவது குறித்து தமிழக அரசு எந்தவித விளக்கத்தையும் அளிக்கவில்லை. இந்த நிலையில் லேப்டாப் வழங்க திட்டம் கைவிடப்பட்டு அதற்கு பதிலாக டேப்லெட் வழங்கலாம் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு இதுகுறித்து பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் தொடரும் என்றும் டேப்லட் உடைந்து விடும் வாய்ப்புள்ளதால் லேப்டாப் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த உள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது வரை மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை இந்த நிலையில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுமா அல்லது அதிமுகவின் திட்டம் என்பதால் முடக்கப்படுமா என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில் (ட்விட்டர்) பதிவில்,"அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில், அம்மாவின் அரசால் தொடர்ந்து சிறப்புற வழங்கப்பட்டு வந்த லேப்டாப்களை இந்த விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டுள்ளது . இன்னும் சில நாட்களில் புதிய கல்வியாண்டு தொடங்கும் நிலையில், இந்த ஆண்டிற்கான லேப்டாப்களை வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் விடியா திமுக அரசு வெளியிடாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே- லேப்டாப் வழங்கவேண்டும் என்ற அரசுப்பள்ளி மாணவர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பை இந்த ஆண்டாவது உங்கள் விடியா திமுக அரசு நிறைவேற்ற முன்வருமா? அல்லது, அம்மா அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற காழ்ப்பில் இந்த ஆண்டும் ஏதேனும் நொண்டிச்சாக்கு சொல்லப்போகிறீர்களா?" என தெரியவில்லை.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Tags

Next Story