98 வயதில் காலமானார் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன்
![98 வயதில் காலமானார் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் 98 வயதில் காலமானார் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன்](https://www.nativenews.in/h-upload/2024/04/09/1888345-rmv.webp)
முன்னாள் அமைச்சர் ஆர்எம் வீரப்பன் (கோப்பு படம்)
எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் வயது முதிர்வின் காரணமாக தனது 98வது வயதில் இன்று காலமானார். ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த ஆர்.எம்.வீரப்பன் எனும் இராம.வீரப்பன், பேரறிஞர் அண்ணாவிடம் உதவியாளராக இருந்தார். பின்னர் தந்தை பெரியாரிடமும் உதவியாளராக இருந்தார். 1950களில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், சினிமா நிறுவனங்களைத் தொடங்கிய போது அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பாளரானார். 1963-ம் ஆண்டு எம்ஜிஆர் தாயார் சத்யா பெயரில் சத்யா மூவீஸ் எனும் திரைப்பட நிறுவனத்தை தொடங்கினார் ஆர்.எம்.வீரப்பன்.
எம்ஜிஆர், அண்ணா திமுக தொடங்கிய போது அவரது வலதுகரமாக அக்கட்சியில் இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன், தமிழ்நாடு சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக, எம்.எல்.சியாக பதவி வகித்தார். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது அவரது அமைச்சரவையில் சக்திவாய்ந்தவராக இருந்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜானகி அணியிலும் பின்னர் ஜெயலலிதா தலைமையில் ஒருங்கிணைந்த அண்ணா திமுகவிலும் பணியாற்றினார். ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்த போது அவரது அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார் ஆர்.எம்.வீரப்பன்.
பின்னர் ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட போது எம்ஜிஆர் கழகத்தைத் தொடங்கினார். மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியுடன் அவர் மறையும் வரை மிக நெருக்கமான நட்பில் இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். இவரது எம்ஜிஆர் கழகம் தொடர்ந்து பல தேர்தல்களில் திமுகவுக்கு ஆதரவு தந்துவந்தது. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுடனும் நெருங்கிய நட்பில் இருந்து வந்தார் ஆர்.எம்.வீரப்பன்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்து பெரும் வெற்றி பெற்ற பாட்ஷா திரைப்படம் ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ் தயாரிப்புதான். எம்ஜிஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடித்த பல படங்களை சத்யா மூவீஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக முதுமையால் தீவிர அரசியலில் ஒதுங்கி இருந்தார் ஆர்.எம்.வீரப்பன். சென்னையில் இன்று முதுமை காரணமாக காலமானார். தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆர் எம் வீரப்பன் எம்ஜிஆருக்கு சிறந்த ஆலோசகராகவும் இருந்து வந்தார். நீண்ட காலம் எம்எல்சி பதவி மூலம் அமைச்சராக இருந்த வீரப்பன் பின்னர் நேரடி தேர்தல் களத்தில் குதித்தார். 1984ம் ஆண்டு எம்ஜிஆர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது தமிழக சட்டமன்றம் தேர்தலை சந்தித்தது. அப்போது அதிமுக கட்சியை முழுமையாக நிர்வாகம் செய்தவர் ஆர்எம் வீரப்பன்.
தேர்தலில் வேட்பாளர் தேர்வு முதல் அனைத்தையும் செய்து கட்சியை வெற்றி பெற வைத்தார். முதல்வராக அமெரிக்காவிற்கு சென்ற எம்ஜிஆரை தேர்தலில் வெற்றி பெற செய்ததன் மூலம் மீண்டும் முதல் அமைச்சராக திரும்பி வர செய்த பெருமை ஆர்எம்வீரப்பனையே சாரும்.
எம்ஜிஆர் மறைவிற்கு பின்னர் அதிமுக ஜா, அதிமுக ஜெ என இரண்டாக பிளவு பட்டபோது ஆர்எம்வீரப்பன் ஜானகி அணியை வழி நடத்தினார். அப்போது அரசு கவிழ்ந்தது. அந்த கால கட்டத்தில் ஜெயலலிதாவை மிக கடுமையாக விமர்சனம் செய்தவர் ஆர்எம் வீரப்பன். ஆனால் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஒன்றான பின்னர் ஜெயலலிதா அதனை பொருட்படுத்தாமல் ஆர்எம் வீரப்பனின் நிர்வாக திறமை மற்றும் செயல்திறனை பாராட்டி அதிமுக அமைச்சரவையில் முதலில் அவருக்கு உணவு துறை வழங்கினார். பின்னர் கல்வி துறை ஒதுக்கினார். எஸ்எஸ்எல்சி வரை மட்டுமே படித்த ஆர்எம்வீரப்பனுக்கு உயர்கல்வி துறையா என்ற ஒரு கேள்வி கூட அப்போது எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu