நாட்டின் நலன் கருதி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்: ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோவடி கிராமத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கோவடி கிராமம் என்னுடைய தாய் கிராமம். நான் சிறுவனாக இருந்தபோது இந்த ஊர் வழியாக தான் திண்டிவனம் செல்வேன். இந்த கிராமத்திற்கு நான் ஒவ்வொரு முறை வரும்போதும் மக்கள் என்னை ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள்.
ஆகவே நான் எனது தாய் கிராமமான கோவடியில் இருந்து நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை முதல்முறையாக தொடங்கியுள்ளேன். இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். ஜவஹர்லால் நேரு 3 முறை பிரதமராக இருந்துள்ளார். அவரது மகள் இந்திராகாந்தியும் 3 முறை பிரதமராக இருந்துள்ளார். தற்போது நரேந்திர மோடி 2 முறை பிரதமராக இருந்துள்ளார். மீண்டும் மோடி 3-வது முறையாக பிரதமராக போகிறார்.
தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி சார்பில் 10 தொகுதிகளில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும்.
இந்த கூட்டணி கட்சிகளின் கொள்கை வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதே. குடிசையிலே வாழ்கின்ற மக்கள் நமது மாவட்டத்தில் தான் உள்ளார்கள். விவசாயிகளுக்காக கடந்து 32 ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை வைத்து விவசாயிகளுக்கு என்று தனி பட்ஜெட்டை அறிவித்து வருகிறோம். மேலும் நாட்டில் குடிப்பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நமது கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும். அவரிடம் பல்வேறு திட்டங்களை பெறுவதுடன், அதில் முதல் திட்டமாக கோதாவரி கங்கை ஆகியவற்றை இணைக்கும் திட்டத்தை பெற்று அதனை செயல்படுத்த வேண்டும்.
மேலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வாக்காளர்களாகிய நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். பல கட்சிகள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பிரமாண்ட மேடைகள் அமைத்து பிரசாரம் மேற்கொள்வார்கள். ஆனால் நான் அவையெல்லாம் இல்லாமல் என்னுடைய மக்களுடன் அமர்ந்து உரிமையோடு வாக்கு சேகரிக்க வேண்டும் என்ற நோக்கிலே இங்கு வந்து உங்களிடம் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டுள்ளேன்.
முக்கனிகளில் முதல் கனி மாம்பழம். அதற்கு வாக்களியுங்கள். வெற்றி தோல்வியை தீர்மானிப்பது பெண்கள். எனவே பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது கிராமத்தில் மட்டுமில்லாமல் தங்களது அருகே உள்ள கிராமங்களுக்கும் சென்று, அங்குள்ள பெண்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu