உதயநிதிக்கு அந்த துறைதானா? முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின் பின்னணி

உதயநிதிக்கு அந்த துறைதானா? முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின் பின்னணி
X
உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக அமைச்சரவையில் கொடுக்கப்படவுள்ளதாக துறை குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த துறை ஒதுக்கப்போகிறார்கள் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலினே இன்று கோடிட்டு காட்டிவிட்டதாக சொல்கிறார்கள்.

திமுகவில் உட்கட்சித் தேர்தல் பணிகள் களைகட்டி வருகின்றன. தனது ஆதரவாளர்களை முக்கிய பதவிகளில் அமரவைக்க அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் முண்டியடிக்கின்றனர். இது ஒரு புறமிருக்க அமைச்சரவை மாற்றம் குறித்தும் திமுக வட்டாரங்களிலிருந்து சுடச் சுட செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவைக்குள் கொண்டு வரும் வேலைகள் வேகமெடுத்துள்ளன. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று இன்னும் சில நாள்களில் ஓர் ஆண்டு நிறைவடையப் போகிறது. உதயநிதிக்கு முடி சூட்டிவிடலாம் என கிச்சன் கேபினட் மூலம் கடந்த சில மாதங்களாகவே அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இதுதான் சரியான நேரம், என தற்போது நாள் குறித்துவிட்டதாக சொல்கிறார்கள்.

ஜூன் மாதம் அமைச்சரவை மாற்றம் கட்டாயம் என பல தரப்பிலிருந்தும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. உதயநிதிக்கு எந்த துறை என்பதில் பல்வேறு யூகங்கள் கிளம்பின. பள்ளிக்கல்வித்துறையை ஒதுக்கப்போகிறார்கள் என ஒரு தரப்பும், ஸ்டாலின் ஏற்கெனவே வகித்த உள்ளாட்சித் துறை கொடுக்கப்போகிறார்கள் என ஒரு தரப்பும் பேசி வருகின்றனர்.

உள்ளாட்சித் துறையானது நகர்ப்புற உள்ளாட்சி, ஊரக உள்ளாட்சி என இரண்டாக பிரிக்கப்பட்டு கே.என்.நேரு, கே.ஆர்.பெரிய கருப்பன் ஆகியோரிடம் உள்ளது. இரண்டையும் மீண்டும் ஒன்றாக்கி உதயநிதியிடம் கொடுத்தால் தமிழ்நாடு முழுக்க அவர் சென்று வருவார். ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதியை முன்னிறுத்த இது பயன்படும் என்று காரணம் சொல்லப்பட்டது.

அதேபோல் பள்ளிக்கல்வித்துறைதான் என்று சொல்பவர்கள் சில காரணங்களை சொல்கிறார்கள். மாணவர்களுக்கான சில திட்டங்களை முன்னெடுத்தால் அடுத்த தலைமுறை வாக்காளர்கள் மனதில் இப்போதே இடம் பிடித்துவிடலாம் என்று கருதுவதாக சொல்லப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 110 விதியின் கீழ் அந்த துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் நான்கு மண்டங்களில் தலா ஒன்று வீதம் நான்கு ஓலிம்பிக் அகாடமிகள், அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும், தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள், ஒலிம்பிக் தங்கம் தேடுதல் திட்டம், வட சென்னையில் நவீன குத்துச்சண்டை விளையாட்டு வளாகம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென்றே தனியாக பிரம்மாண்டமான மைதானம் என பல அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி போன்று சர்வதேச போட்டிகளை தமிழ்நாட்டில் அதிகமாக நடத்தி சரவதேச கவனத்தை தமிழகம் நோக்கி திருப்பலாம், அதன் மூலம் தொழில் முதலீடுகளை ஈர்க்கலாம் என்றும் முதல்வர் இன்று சட்டப்பேரவையில் பேசினார்.

உதயநிதியை மனதில் வைத்தே முதல்வர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக சொல்கிறார்கள். எத்தனையோ துறைகள் இருக்க ஏன் இந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என விசாரித்தோம். மக்கள் மத்தியில் அதிகம் பரிட்சயம் இல்லாத துறையில் தனது செயல்பாடுகள் மூலம் கவனத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் உதயநிதியின் திட்டமாம்.

உதாரணத்துக்கு அறநிலையத்துறை இதற்கு முன் அதிகளவில் செய்திகளில் அடிப்படவில்லை. ஆனால் சேகர் பாபுவின் அதிரடி நடவடிக்கைகளால் தொடர்ந்து அத்துறை கவனம் பெற்று வருகிறது. அதேபோல் உதயநிதியும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை மூலம் சாதனைகளை நிகழ்த்தலாம் என நினைக்கிறாராம்.

இளைஞர்களை ஈர்க்கும் வகையில் புதிய திட்டங்களை கொண்டு வரலாம். அதன் மூலம் புதிய, இளம் வாக்காளர்களை இப்போதே தன் பக்கம் திருப்பலாம் என திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஜல்லிக்கட்டு போன்ற கலாச்சார விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் போது கிராமப்புறங்களிலும் உதயநிதியின் கிராஃப் உயரக்கூடும்.

ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் 41ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. அதற்குள்ளாக உதயநிதி விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக பதவியேற்றுவிட்டால் சர்வதேச கவனம் பெறும் அந்நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமைச்சராக அவரும் பங்குபெறுவார். அதற்கான வேலைகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருவதாக நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து சொல்கிறார்கள்.

சிவ. வீ. மெய்யநாதன் வசம் தான் தற்போது விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன் துறை உள்ளது. அவர் உதயநிதிக்கு நெருக்கமானவராகவே பார்க்கப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் இதோடு சேர்த்து சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு துறையும் அவர் வசம் உள்ளது. எனவே விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன் துறையை மட்டும் அவரிடமிருந்து உதயநிதிக்கு கொடுத்தால் பிற அமைச்சர்கள் மத்தியிலும் சலசலப்போ, அதிருப்தியோ ஏற்படாது என்பதும் கூடுதல் தகவல்.

Next Story
future ai robot technology