விலைவாசி உயர்வு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
கொரோனா நோயின் தாக்கம் ஒரு புறம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில் மறுபுறம் விலைவாசி உயர்வு அதைவிட மோசமான தாக்கத்தினை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. கொரோனா நோய் பாதிப்பின் கொடூர தாக்கத்தையடுத்து முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாக பொதுமக்கள் வேலை வாய்ப்பையும் வருமானத்தையும் இழந்து அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பொதுமக்களை விழி பிதுங்க வைத்துள்ளது. குறிப்பாக மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் அரிசி ,கோதுமை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், ஆகியவற்றின் விலை உச்சத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கொரோனா தாக்கம் என்பது சென்ற ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடர்ந்து இருந்து வந்தாலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இந்த மாதம் உச்சத்திற்கு சென்று உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது சமையல் எண்ணெயின் விலை கிட்டத்தட்ட 20 சதவீதமும் சூரியகாந்தி எண்ணெய் விலை 56 சதவீதம் கடுகு எண்ணெய் விலை 42 சதவீதமும் விலை 45 சதவீதமும் பாமாயில் விலை 52 சதவீதம் பருப்பு வகைகளின் விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று அரிசி, சர்க்கரை, உப்பு, போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் மாத பட்ஜெட்டில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
விலைவாசி உயர்வுக்கு பல்வேறு பொருளாதார காரணங்கள் இருந்தாலும் இந்தச் சூழ்நிலையில் விலைவாசி உயர்வு ஏற்படுவதற்கு காரணம் அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுவதும் பதுக்கப்படுவதும்தான்.
ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது வெளிச் சந்தையில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தும் வகையில் நிலைநிறுத்தல் நிதி என்ற திட்டம் ஒன்றினை ஏற்படுத்தி அதற்கு நூறு கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கி அரிசி ஒரு கிலோ 25 ரூபாய்க்கு அரிசி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு விற்க நடவடிக்கை எடுத்ததோடு அத்தியாவசிய பொருட்களின் விலையை வெகுவாகக் குறைத்தார்கள்
எனவே விலைவாசி உயர்வதற்கும் அதற்கு முக்கிய காரணமாக விளங்கும் கடத்தலையும் பதுக்கலை தடுக்கவும் சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள மக்கள் நியாயமான விலையில் வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்களை பெறவும், தேவைப்பட்டால் விலை நிறுத்தல் நிதியத்தை ஏற்படுத்தி அதன்மூலம் மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu