எனக்கு பின்னரும் 100 ஆண்டுகள்...காற்றில் கரைந்து போன ஜெயலலிதாவின் கனவு

எனக்கு பின்னரும் 100 ஆண்டுகள்...காற்றில் கரைந்து போன ஜெயலலிதாவின் கனவு
X

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா.

‘எனக்குப் பின்னரும் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும்’. இது மறைந்த தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடைசியாக உதிர்த்த வார்த்தைகள். ஆம்... சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்காவால் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா கர்நாடக மாநிலத்தின் பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நீதிபதி தங்கராஜ் அளித்த தீர்ப்பின் காரணமாக விடுதலையாகி மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்ற பின்னர் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசிய வார்த்தைகள் தான் இவை.

அந்த பொதுக்குழுவில் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்த ஜெயலலிதா தமிழக மக்களின் வாழ்க்கையே தனது லட்சியம் தமிழகமே என்னை அம்மா என்று அழைக்கும் போது நான் அவர்களுக்கு கடைசி வரை உழைப்பேன் என்று அவர் மிக உருக்கமாக பேசினார். இறுதியாக அவர் மரணத்திற்கு முன்னால் கர்ஜித்த இந்த வார்த்தைகள் மரண வாக்கு மூலமாகவே கருதப்பட்டது.

பல்வேறு அரசியல் அழுத்தங்களின் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சல், உடல் ரீதியான பிரச்சினைகளையும் தாங்கி கொண்டு அவர் பெண் சிங்கம் போல் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசியது அவரது ஆளுமை திறனை வெளிப்படுத்தியது. சோர்ந்து கிடந்த தொண்டர்களை வெகுண்டெழ செய்தது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் காரணமாக ஓ. பன்னீர்செல்வம் சில காலம் முதலமைச்சராக இருந்தாலும் பின்னர் கூவத்தூரில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டதும், சுமார் நான்கரை ஆண்டு காலம் அவர் பதவியில் இருந்து கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்தியதும் தமிழக மக்கள் அறிந்ததே.

ஆனால் எடப்பாடி பழனிசாமி பதவியில் இருந்த காலத்திலேயே நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுகவில் நடைபெற்ற உட் கட்சி பிரச்சனை, இரட்டை தலைமை விவகாரம் போன்றவற்றால் அக்கட்சி நாளுக்கு நாள் பின்னடைவை சந்தித்து வருவதாக கருதப்பட்டது. இந்த உள் கட்சி மோதலில் ஒரு வழியாக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியால் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் பெரும்பான்மை நிர்வாகிகளின் ஆதரவுடன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவர்கள் இருவருக்குமான கட்சி தொடர்பான வழக்குகள் இன்னும் முடியவில்லை. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இப்படி சொந்த கட்சியிலேயே இவர்கள் யார் பெரியவர் என மோதிக் கொள்வதன் காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக எளிதான வெற்றியை பெற்றது. தென் மாவட்டங்களில் டிடிவி தினகரனால் ஏற்பட்ட சரிவு அதிமுகவை வெற்றி பெற விடாமல் தடுத்தது.

இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்து உள்ளது. இதற்கு காரணமும் கட்சியில் ஒற்றுமை இல்லாத நிலைதான். பாரதிய ஜனதாவுடன் இருந்த கூட்டணியை அதிமுக தானாக முன்வந்து கழட்டி விட்டதால் இரண்டு கட்சிகளுக்கும் இழப்புதான். அதுவும் ஒரு இடத்தில் கூட அதிமுக வெற்றி பெற முடியாமல் போனது கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் 40 இடங்களில் வெற்றி வாகை சூடி தமிழகத்தில் தாங்கள்தான் நிரந்தரம் என பறைசாற்றி கொண்டு வருகிறார்கள்.இது ஒரு வெற்றியே அல்ல, திமுகவிற்கு எதிரான வாக்குகள் இரண்டான பிரிந்ததால் தான் திமுக கூட்டணி வெற்றி பெற முடிந்தது என என்ன தான் கூறி வந்தாலும் வெற்றி வெற்றி தானே.

இது ஒரு புறம் இருக்க பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சில இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்க வந்ததும் அதிமுகவின் சரிவுக்கு மேல் சரிவாக கருதப்படுகிறது. தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி ,கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிமுக நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது ஒரு இடத்தில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை விட அதிமுக குறைவாக பெற்று இருப்பது அதிமுகவிற்கு எதிர்காலம் இருக்கிறதா என்ற ஒரு கேள்வியை தான் எழுப்பி உள்ளது.

இந்த சூழலில் தான் அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் சின்னம்மா என அழைக்கப்படுபவருமான சசிகலா முயற்சித்து வருகிறார். ஆனால் சாதி ரீதியாக அவர் களமிறங்குவதாக கூறி அவரை கட்சிக்குள் உள்ளே வரவிடாமல் எடப்பாடி பழனிசாமியும் தடுத்து வருகிறார்கள். முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூட மீண்டும் ஒன்று சேரலாம் என தெரிவித்த கருத்தை கூட எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை. அதனையும் புறந் தள்ளிவிட்டார்.

ஆக தோல்வி மேல் தோல்வி அதிமுகவிற்கு ஏற்பட்டு வருவதை பற்றி அதிமுகவின் முன்னணி தலைவர்கள் சிந்தித்தார்களோ இல்லையோ கட்சியே தங்கள் எதிர்காலம் கட்சியை தங்கள் உயிர் மூச்சு என கருதும் அதிமுக தொண்டர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவை நினைத்து கண்ணீர் விட்டு வெளியே தெரியாமல் கதறி வருகிறார்கள். இதற்கு காரணம் அதிமுக என்ற இயக்கத்தில் மட்டும்தான் சாதாரண தொண்டன் கூட உயர் பதவிக்கு வர முடியும், அமைச்சர், எம்பி எம்எல்ஏ ஆக முடியும் என்கிற நிலை உள்ளது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் தொண்டர்கள் இன்னும் அப்படியே இருக்கிறார்கள். அதிமுகவின் ஓட்டு வங்கியும் அப்படியே தான் உள்ளது.

ஆனால் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் பின்னடைவை பார்த்தால் ஜெயலலிதா இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இந்த இயக்கம் தான் ஆட்சியில் இருக்கும் என்று சொன்ன அவரது கனவு திட்டம் நிறைவேறுமா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

இந்த கேள்விக்குறி ஆச்சரியக்குறியாக மாற வேண்டுமானால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாட்டையை சுழற்றவேண்டும். சுயநலம் கருதி மாற்று கட்சி குறிப்பாக தி மு கவுடன் தொடர்பில் இருக்கும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு விடை கொடுத்து விட்டு கட்சிக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் தொண்டர்களை கண்டு பிடித்து அவர்களை முக்கிய பொறுப்புகளில் நியமிக்க வேண்டும். கடந்த காலங்களில் ஜெயலலிதா இப்படித்தான் நடவடிக்கை எடுத்து கட்சியை ஆலமரம் போல் வளர்த்தார்.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தங்களது இறுதி மூச்சு வரை வைராக்கியத்துடன் கடைபிடித்து வந்த திமுக எதிர்ப்பு பிரச்சாரங்களை கையில் எடுத்து மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை இன்னும் தீவிரமாக நடத்த வேண்டும். இல்லை என்றால் திமுகவுடன் அதிமுக முன்னணி தலைவர்கள் திரைமறைவு தொடர்பில் இருக்கிறார்களோ என்கிற அதிமுகவின் அடிமட்ட தொண்டனின் மனதில் உள்ள கருத்து உண்மை தான் என்பது போல் ஆகி விடும்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்