குறிப்பிட்ட சமூக வாக்குகளை கவர்ந்திழுக்க இ.பி.எஸ். போடும் புது கணக்கு

குறிப்பிட்ட  சமூக வாக்குகளை கவர்ந்திழுக்க இ.பி.எஸ். போடும் புது கணக்கு

எடப்பாடி பழனிசாமி.

தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சமூக வாக்குகளை கவர்ந்திழுக்க இ.பி.எஸ். போடும் புது கணக்கு எந்த அளவிற்கு கை கொடுக்கும் என தெரியவில்லை.

தென் தமிழகம் மற்றும் டெல்டாவை குறி வைத்து ஆட்டத்தை தொடங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. குறிப்பாக டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா சார்ந்துள்ள சமூக வாக்குகளை அதிமுக பக்கம் திருப்புவதற்கான அதிரடி மூவ்களை நகர்த்தி வருகிறார் ஈபிஎஸ்.

இந்நிலையில், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மற்றும், அகில இந்திய பார்வர்ட் பிளாக் பசும்பொன் கட்சி ஆகியவை அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகமும் அதிமுக அணியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், குறிப்பாக தேவர் சமூக வாக்குகளை குறிவைத்து எடப்பாடி பழனிசாமியின் ஆட்டம் தீவிரமடைந்துவிட்டது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், தேசிய துணைத் தலைவருமான பி.வி.கதிரவன் இன்று காலை சென்னை கிரீன்வேஸ் இல்லத்திற்குச் சென்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, வரும் லோக்சபா தேர்தலில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்று உள்ளது. கடந்த ஆண்டு மதுரையில் நடைபெற்ற அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநாட்டில் திமுக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றுப் பேசினர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், திமுகவுடன் கூட்டணி அமைத்து, உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் பி.வி.கதிரவன்.

இந்நிலையில், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார் பிவி கதிரவன். அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில், அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு, அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அகில இந்திய பார்வர்டு ப்ளாக் பசும்பொன் கட்சியின் பொதுச் செயலாளர் பசும்பொன் பாண்டியன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து வரும் லோக்சபா தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் கட்சியுடனும் அதிமுக பேசி வருவதாகக் கூறப்படுகிறது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவடட்ங்களிலும் தேவர் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உள்ளது. சில தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவுக்கு தேவர் சமூக வாக்காளர்கள் உள்ளனர். ஜெயலலிதா காலத்தில் தேவர் சமூக வாக்குகள் பெருமளவில் அதிமுகவுக்குச் சென்றதன் வாயிலாக, அதிமுக தென் மாவட்டங்களில் நல்ல எழுச்சியைப் பெற்றிருந்தது.

ஆனால், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, 2021 சட்டமன்றத் தேர்தலிலும் சரி, தென் மாவட்டங்கள் அதிமுகவுக்கு பலன் தரவில்லை. 2021 சட்டசபை தேர்தல் சமயத்தில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அளிக்க எடப்பாடி பழனிசாமி அரசாணை வெளியிட்டது தென் மாவட்டங்களில் எதிர் விளைவை ஏற்படுத்தி விட்டதாக அதிமுக தலைவர்களே வெளிப்படையாகப் பேசினர். இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தல் தேவர் சமூக வாக்குகளை அதிமுக பக்கம் மீண்டும் திருப்ப வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் ஈபிஎஸ். டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் அந்த சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் என்பதால், அவர்களைத் தாண்டி அந்த வாக்குகளை அதிமுகவுக்கு கொண்டு வருவதற்கான வழிகளில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளார்.

டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் பாஜக அணியில் உள்ளதால், பாஜகவை விரும்பாத தேவர் சமூக வாக்குகளை அதிமுக பக்கம் கொண்டு வர வேண்டும் என்பதே ஈபிஎஸ்ஸின் திட்டம் என்கிறார்கள். அதற்காகவே, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க ஃபார்வர்டு பிளாக் கட்சிகளை தம் பக்கம் இழுத்து வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி. பாஜகவும் தென் மாவட்டங்களில் தேவர் சமூக வாக்குகளை குறி வைத்தே டிடிவி தினகரனுடன் கைகோர்க்க முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தேவர் சமூக வாக்குகள் பாஜக பக்கம் திரும்பி விடக்கூடாது, பழைய அதிமுகவின் எழுச்சியை தென் மாவட்டங்களில் நிறுவ வேண்டும் என்பதற்காக கட்சி சார்பற்ற சமூக வாக்குகளைக் கவர்வதற்காகவே சிறிய கட்சிகளுடன் கைகோர்த்து பெரிய பிளான் போட்டு உள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.

தேவர் சமூக மக்களிடையே செல்வாக்கு பெற்ற கட்சிகள் அதிமுகவுடன் இருந்தால், சசிகலா சார்ந்த சமூக மக்களின் அபிமானம் தன் பக்கமும் படும், அது ஓபிஎஸ், டிடிவி தினகரன் தரப்பின் செல்வாக்கைச் சரிக்கும் என்பதும் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு என்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரத்தினர். ஈபிஎஸ் போடும் இந்த திகுதிகு கணக்குகள் வொர்க் அவுட் ஆகுமா என்பது தேர்தல் முடிவுகளில் தான் தெரியவரும்.

Tags

Next Story