அதிமுக காணாமல் போகும் என பாஜக நிர்வாகிக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி
மதுரை பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ராம சீனிவாசன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது திமுகவை மட்டுமில்லாமல் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.
அண்மையில் ராம சீனிவாசன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அதிமுகவுக்கு ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளதாக எடப்பாடி அடிக்கடி கூறுகிறார். ஆனால் ஜெயலலிதா மறைந்த பிறகு எந்த தேர்தலில் அதிமுக ஒன்றரை கோடி ஓட்டுகளை வாங்கி உள்ளது? இந்த மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது. மக்களிடம் செல்வாக்கை இழந்துவிட்ட அந்தக் கட்சி பல தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் எனக் கடுமையாகப் பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் ராம சீனிவாசனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், மதுரையில் பாஜக மாநில பொதுச் செயலாளரும் அக்கட்சி வேட்பாளராகவும் இருக்கும் ராம சீனிவாசன் என்பவர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதற்காக என்னைப் பற்றிப் பேசியுள்ளார்.
இப்போது நடக்கும் மக்களவைத் தேர்தலோடு அதிமுக காணாமல் போகுமாம். உன்னைப் போல எத்தனை பேரை பார்த்தது அதிமுக. அதிமுக வரலாறு உனக்கு தெரியுமா?
நான் உட்பட இந்த மேடையில் இருப்பவர்கள் 50 ஆண்டு காலமாக இந்த கட்சிக்காக உழைத்தவர்கள். உன்னைப் போல சொகுசு வாழ்க்கை நடத்துபவர்கள் அல்ல. இரவு பகல் பாராமல் உழைக்கின்ற உழைப்பாளிகள் நாங்கள். மக்களுக்கு சேவை செய்து அரசியல் செய்கின்றோம். உங்களைப் போல வெற்று விளம்பரத்தில் அரசியல் நடத்தவில்லை.
கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாடில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து, அதிக தொண்டர்களை கொண்ட கட்சி என்றால் அதிமுக தான்.
எங்களை பார்த்து 2024ஆம் ஆண்டுக்கு பிறகு அதிமுக இருக்காது என்று சொல்கிறாய். பொறுத்திருந்து பார், இந்த தேர்தலோடு பெட்டி அரசியல் செய்து கொண்டிருக்கும் உங்களை போன்றவர்கள் அடையாளம் இன்றி போய்விடுவீர்கள். அது தான் யதார்த்த உண்மை.
1998ல் பாஜகவை தமிழ்நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியதே ஜெயலலிதா தான். பாஜகவின் தாமரை சின்னத்தை தமிழ்நாட்டில் அடையாளம் காட்டியது அதிமுக தான். உங்களுக்கே அடையாளம் காட்டியது அதிமுக தான். இப்போ எங்களைப் பார்த்தா கட்சி இருக்காதுன்னு சொல்ற?" என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu