செந்தில் பாலாஜி மீதான அமலாக்க துறை வழக்கு ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

போலீஸ் காவலில் செந்தில் பாலாஜி (கோப்பு படம்)
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மார்ச் 6 தேதி வரை நீட்டித்துள்ளது. கடந்த 9 மாத காலமாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதிலும் சிக்கல் உருவாகியுள்ளதால் அவர் வீட்டிற்கு எப்போது வருவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர்.
இதய பாதிப்பு ஏற்படவே ஆபரேசன் செய்யப்பட்டது. ஒரு மாத காலம் மருத்துவமனையில் ஓய்வெடுத்த செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படவே தனது அமைச்சர் பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.
தீபாவளிக்கு வீட்டிற்கு வந்து விடுவார்.. பொங்கலுக்கு வீட்டிற்கு வந்து விடுவார் என்று அவரது ஆதரவாளர்களும் உறவினர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அவருக்கு ஜாமீன் கிடைத்தபாடில்லை. செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் தலைமறைவாக இருப்பதால் ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று அமலாக்கத்துறை முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து இன்றைய தினம் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர் படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை வரும் 6ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 23வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன். ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டு வருவதால் அதிக அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளாராம் செந்தில் பாலாஜி. லோக்சபா தேர்தலுக்கு முன்பாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? பிரச்சாரத்திற்கு அவர் சிறையில் இருந்து வெளியே வருவாரா என்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
முன்னதாக செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மீது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில், செந்தில்பாலாஜி உள்பட 47 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. சென்னை எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கக்கூடிய சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை மீண்டும் விசாரித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், செந்தில் பாலாஜிக்கு எதிராக எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. கூடுதல் குற்றப்பத்திரிகையில் அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என சுமார் 900 பேர் சேர்த்துள்ளதால் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வழக்கை நடத்துவதற்கான அனுமதி தமிழக அரசிடம் இருந்து இன்னும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயவேல் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், கூடுதல் குற்றப்பத்திரிகையை ஏற்று வழக்கை நடத்துவதற்கான அனுமதி இன்னும் தமிழக அரசிடம் இருந்து கிடைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu