இரட்டை இலை விவகாரத்தில் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்றதாக வழக்கு. நாளை மறுநாள் ஆஜராக டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே சுகேஷ் சந்திரசேகர் அமலாக்கத்துறையின் விசாரணையில் இருக்கும் நிலையில் தற்போது டிடிவி தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் தனக்கு 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக சுகேஷ் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையிலேயே இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டது. இதன் காரணமாக அதிமுக இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டது, அதிமுக பிளவுபட்டதின் எதிரொலியாக அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
இரு பிரிவினருக்கிடையே அதிமுகவின் சின்னத்தை கைப்பற்ற பல்வேறு முயற்சிகள் நடைபெற்றது. தேர்தல் ஆணையத்திடம் முறைகேடான முறையில் சின்னத்தை மீட்க பெங்களூருவைச் சேர்ந்தசுகேஷ் சந்திரசேகரிடம் டிடிவி தினகரன் அணியினர் பேரம் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் டி.டி.வி தினகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீதும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தினகரனோ, சுகேஷ் சந்திரசேகர் யார் என்பதே எனக்கு தெரியாது.
அவரிடம் நான் பேசியதும் கிடையாது என திட்டவட்டமாக மறுத்தார்.மேலும், இது தொடர்பாக டெல்லி போலீசாரிடம் விசாரணைக்கு ஆஜரானார் தினகரன். அவரிடம் 4 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில் டெல்லி போலீசாரால் தினகரனும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் தினகரன் ஜாமீனில் விடுதலையானார். இந்நிலையில் மீண்டும் இரட்டை இலை வழக்கில் தினகரன் விசாரணைக்கு உள்ளாக்கப்படவுள்ளார்.
இதற்கிடையே திகார் சிறையிலிருக்கும் சுகேஷ்சந்திரசேகரின் பண்ணை வீடு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, கானாத்தூரில் உள்ளது. இந்த வீட்டில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் 16 சொகுசு கார்கள், லேப்டாப்கள், 85 லட்சம் பணம், தங்க கட்டிகள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் பண்ணை வீட்டில் இருக்கும் சிசிடிவி காட்சி களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். பல முக்கிய ஆவணங்கள் மூலம் சிறையில் இருந்து கொண்டும் சுகேஷ் முறைகேடான வேலைகளில் ஈடுபட்டது தெரியவந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu