இன்று ஈ.எம்.எஸ். நம்பூதிரிபட் டின் 113 வது பிறந்த தினம்

இன்று ஈ.எம்.எஸ். நம்பூதிரிபட் டின் 113 வது பிறந்த தினம்
X
இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் முதல்வர் ஈ.எம்.எஸ். நம்பூதிரி பாட்டின் 113 வது பிறந்த தினம் இன்று

ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூரிப்பாடு- சுருக்கமாக ஈ.எம்.எஸ் (EMS) என அறியப்படுபவர். தற்போதைய மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த பெரிந்தல்மண்ணா வட்டத்தில் உள்ள ஏலங்குளம் என்ற கிராமத்தில் ஜூன் 13, 1909ஆம் நாள் பரமேசுவரன் நம்பூதிரிப்பாட்டிற்கு மகனாகப் பிறந்தார்.

தமது இளவயதிலேயே தமது நம்பூதிரிப்பாடு இனத்தில் நிலவிய சாதி மற்றும் பழமைவாதங்களுக்கு எதிராக போராடினார். முற்போக்கு நம்பூதிரி இளைஞர்களின் அமைப்பான வள்ளுவநாடு யோகச்சேம சபையின் நிர்வாகத்தில் பங்குபெற்றார். அவரது கல்லூரி நாட்களில் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திய விடுதலை இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்திருந்தார்.

தமது சோசலிசக் கொள்கைகளில் உறுதியாக இருந்த அவர் ஏழைத் தொழிலாளர்களின் நலன் குறித்து உந்தப்பட்டு பொதுவுடமைக் கட்சியில் இணைந்தார். கேரளாவில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி அமைய காரணமானவர்களில் இவரும் ஒருவர். அதற்காகச் சில காலம் தலைமறைவாகவும் இருக்க நேரிட்டது. 1962ஆம் ஆண்டு இந்தியச் சீனப் போரின்போது சீனாவின் காரணங்களை எடுத்துரைத்த சிலரில் ஐவரும் ஒருவர்.1964ஆம் ஆண்டு கட்சி பிளவு பட்டபோது, மார்க்சியப் பிரிவுடன் இணைந்தார். அதன் மத்தியகுழு மற்றும் பொலிட்பீரோவில் அங்கத்தினராக இருந்த அவர் 1977ஆம் ஆண்டு முதல் 1992 வரை அக்கட்சியின் பொது செயலாளராக இருந்தார். அவரது மறைவு வரை கட்சியின் பொலிட்பீரோ அங்கத்தினராக இருந்தார்.

அவர் ஓர் எழுத்தாளர். பல இலக்கிய படைப்புகளுக்குச் சொந்தக்காரர். கேரள வரலாறு குறித்த அவரது புத்தகம் குறிப்பிடத்தக்கது

1957ல் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் முதல்வராக கேரளாவில் பதவியேற்றார். அவருடைய ஆட்சி 24 மாதங்களே நீடித்தது. ஆனால் 24 மாதங்களில் அவர் 88 சட்டங்களை இயற்றினார். கல்வி, பொருளாதாரம், நில உச்சவரம்பு, மருத்துவம், பெண் கல்வி, குறைந்தபட்சம் தொழிலாளர்களுக்கு ஊதியம், தொழிற்சங்கம், தொழிலாளர் நலன், போக்குவரத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என இந்த பட்டியல் நெடியது.

இன்று கேரளா படிப்பறிவிலும், பெண் கல்வியிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், முன்னணியில் இருப்பதற்குக் காரணம் 24 மாதங்களே ஆட்சி புரிந்தவர் கட்டிய வலுவான அஸ்திவாரம். உயர் சாதியில் பிறந்தவர். சாதி வழங்கிய அனைத்து வசதிகளையும் அங்கீகாரத்தையும் உதறியவர். குடிசையில் வாழ்ந்தவர். நாவன்மை அவருக்கு இல்லை, பிறவியில் திக்குவாய் குறைபாடு உள்ளவர். எந்த சொத்தும் சேர்க்கவில்லை.

அவரிடம் இருந்த உடைமைகளை நூல்களை கட்சிக்கு தானம் செய்தார். அதே மாநிலத்தை சேர்ந்த அருந்ததி ராய் God Of Small Things என்ற நாவலில் அவர் பெயரில் உள்ள கதாபாத்திரத்தை ஒரு ஓட்டல் நடத்தும் முதலாளியாக மிக மோசமாக சித்தரித்திருப்பார். அந்த நூலுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்தபோது அதை மறுத்து கருத்து சுதந்திரம் வேண்டும் என்றவர்.

காந்தியை விமர்சித்தவர். இயக்குநர் ஜான் அப்ராஹாம் அவரைப்பற்றி ஒரு திரைப்பட எடுக்கும் வேளையில் இருந்தபோது துரதிருஷ்டவசமாக காலமானார்.

Tags

Next Story