தேர்தல் நடத்தை விதிமீறியதாக ஓ. பன்னீர் செல்வம் மீது வழக்குப்பதிவு

தேர்தல் நடத்தை விதிமீறியதாக ஓ. பன்னீர் செல்வம் மீது வழக்குப்பதிவு

ஓ. பன்னீர் செல்வம்.

தேர்தல் நடத்தை விதிமீறியதாக ராமநாதபுரம் வேட்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓ பன்னீர் செல்வம் மீண்டும் சிக்கலில் சிக்கி உள்ளார். அவர் மீது தேர்தல் நடத்தை விதி மீறியதாக அளிக்கப்பட்ட புகாரில் புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். வரும் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் அவரது அணி உள்ளது. பாஜக சார்பில் ராமநாதபுரம் தொகுதி ஓ பன்னீர் செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து ராமநாதபுரம் தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் பாஜக கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி உள்ளார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். இந்த வேளையில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரத்துக்கு வாகனங்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதாவது தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாவிட்டால் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்த வகையில் ஓ பன்னீர் செல்வம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக அனுமதியின்றி வாகனங்களை பிரசாரத்துக்கு பயன்படுத்தியுள்ளார். 8 வாகனங்களில் பிரசாரம் செய்த ஓ பன்னீர் செல்வம் மீது நடவடிக்கை கோரி தேர்தல் பறக்கும் படை அதிகாரி முகமது யாசர் திருப்புல்லாணி போலீசில் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில் ஓ பன்னீர் செல்வம் மீது தேர்தல் நடத்தை விதிமீறியதாக புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்து பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். ஓ பன்னீர் செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும், இரட்டை இலை சின்னத்தை ஓ பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்க முடியாது என முறையே நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தற்போது தனி அணியாக செயல்படும் ஓ பன்னீர் செல்வத்தை ராமநாதபுரத்தில் தோற்கடிக்க வேண்டும் என அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். இது அவருக்கு சவாலாக அமைந்துள்ளது.

மேலும் ராமநாதபுரம் தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் பெயரில் மேலும் 5 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது. இவர்களும் சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிடுகின்றனர். இதனால் வாக்காளர்கள் குழம்பி முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துக்கு பதில் வேறு ஓபிஎஸ்களுக்கு ஓட்டளிக்கவும் வாய்ப்புள்ளது. இப்படியாக ராமநாதபுரம் தொகுதியில் சிக்கலை சந்தித்து வரும் ஓ பன்னீர் செல்வத்தின் மீது தற்போது தேர்தல் நடத்தை விதிமீறியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story