‘துரோகிக்கு பாடம் புகட்டுங்கள்’ தேனியில் எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு

‘துரோகிக்கு பாடம் புகட்டுங்கள்’ தேனியில் எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு
X

எடப்பாடி பழனிசாமி.

‘துரோகிக்கு பாடம் புகட்டுங்கள்’ என தேனியில் டிடிவி தினகரனுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஆவேச பேசினார்.

அதிமுகவின் ஒரிஜினல் வேட்பாளர் நாராயணசாமி என்று தேனியில் எடப்பாடி பழனிசாமி அழுத்தமாக சொன்னார்.டிடிவி தினகரன் தேனியில் நிற்கும் நிலையில், எடப்பாடியின் நேற்றைய பேச்சு பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது..

தேனி லோக்சபா தொகுதியில் அதிமுக சார்பில் வி.டி.நாராயணசாமி, பாஜக கூட்டணி சார்பில் டிடிவி தினகரன், திமுக சார்பில் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். தேனியில் டிடிவி தினகரன் போட்டியிடுவதால் போட்டி கடுமையாக உள்ளது. 2004க்கு பிறகு மீண்டும் டிடிவி தினகரன் களம் இறங்கி உள்ள நிலையில், அங்குள்ள ஏழை மக்கள் பலர் டிடிவி தினகரனை அதிமுக வேட்பாளராக நினைக்கும் அளவிற்கு உள்ளதாக கூறப்படுகிறது. டிடிவி தினகரன் செல்லும் இடமெல்லாம் ஜெயலலிதாவின் புகழை பரப்பி ஓட்டுக் கேட்பதால் இந்த குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தேனியில் அதிமுகவின் வாக்குகள் சிதறும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது,

இந்நிலையில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் வி.டி.நாராயணசாமியை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தேனி பங்களாமேட்டில் நேற்று நடந்தது. இதில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தேனி தொகுதியில் பல பேர் சவால் விட்டுக் கொண்டிருக்குறாங்க.. இங்கே ஒரிஜினல் அ.தி.மு.க. நமது வேட்பாளர் நாராயணசாமி தான். திமுகவில் போட்டியிடுபவர் எந்த கட்சியில் இருந்து (அதிமுகவில்) போனார்? யார் அடையாளம் காட்டினார்கள்? நீங்கள் அடையாளம் காட்டினீர்கள். உங்களின் உழைப்பால் எம்.எல்.ஏ., எம்.பி. ஆனார்கள். அதை மறைக்கலாமா? மறைக்கிறவர்களுக்கு இந்த தேர்தலில் தோல்வியை தண்டனையாக நீங்கள் தர வேண்டும். இன்னொருவர் அமமுகவில் இருந்து நிற்கிறார். அவரும் அதிமுகவில் இருந்து போனவர் தான். அவருக்கும் இந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுங்கள். அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தார்களோ அவர்களுக்கு நீங்கள் தகுந்த பாடம் புகட்டுங்கள். அவர்கள் நன்றி உடையவர்களாக இருந்தால் இங்கேயே இருந்திருக்க வேண்டும்.

டி.டி.வி.தினகரன் 14 ஆண்டுகள் எங்கே போனார் என்றே தெரியவில்லை. இப்போது பதவிக்காக தேனி மக்களாகிய உங்களை வந்து பார்க்கிறார். தன்னுடைய சுய லாபத்துக்காக, அதிகாரத்துக்காக கட்சி மாறி போனவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களுக்கு எம்.ஜி. ஆரும், ஜெயலலிதாவும் உங்களின் மூலம் தேர்தலில் சரியான தண்டனையை வழங்கிவிடுவார்கள். பாஜகவை அன்று விமர்சனம் செய்த தினகரன் தற்போது அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். பச்சோந்தி தான் கொஞ்சம் நேரம் கழித்து நிறம் மாறும். இவர்கள் அடிக்கடி நிறம் மாறுகிறவர்கள். இவர்களை நம்பி ஓட்டுபோட முடியுமா? 14 ஆண்டு காலம் மக்களை பார்க்காத ஒருவருக்கு ஓட்டு போட்டு என்ன பயன் கிடைக்கும்? திமுக வேட்பாளர் மற்றும் குக்கரில் நிற்கும் வேட்பாளரை இந்த தேர்தலில் டெபாசிட் இழக்க வைக்கும் அளவுக்கு நீங்கள் அதிமுகவிற்கு வாக்களித்து, அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

மு.க.ஸ்டாலின் இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்று பேசுவது தினமும் பத்திரிகைகளிலும் வருகிறது. இது, கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவர் வானம் கிழித்து வைகுண்டம் போன கதையாக இருக்கிறது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் செல்வாக்கை இழந்து விட்டார். இந்த நேரத்தில் இந்தியா கூட்டணி என்ற அமைப்பை ஏற்படுத்தி, மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று ஆட்சி அதிகாரத்துக்கு வந்து கொள்ளை அடிக்க முயற்சி செய்து வருகிறார். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான தேர்தலாக இது இருக்க வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை நாங்கள் கொண்டு வந்தோம். அதை எல்லாம் நிறுத்திவிட்டார்கள். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் 2026-ல் மலரும். எடப்பாடி பழனிசாமி, மோடியை கண்டு பயப்படுகிறார் என்று இன்றைக்கு ஸ்டாலின் சொல்கிறார். வேண்டும் என்றே திட்டமிட்டு உண்மைக்கு புறம்பாக பேசி, பொய்யை உண்மையாக்க பார்க்காதீர்கள். எங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதை எதிர்த்து முறியடிக்கக்கூடிய சக்தி படைத்த கட்சி அதிமுக. பாஜக மட்டுமல்ல. எந்த அரசாக இருந்தாலும் அதை எதிர்த்து முறியடிக்கும் சக்தி படைத்த கட்சி அதிமுக. உங்களைப் போன்று எதிர்க்கட்சியாக இருக்கும் போது, 'கோ பேக் மோடி' என்பீர்கள். கருப்பு கொடி காட்டுவீர்கள். ஆளும் கட்சி ஆனவுடன் 'வெல்கம் மோடி' என்பீர்கள். ஒரு நிகழ்ச்சிக்கு பிரதமர் வந்தபோது, வெள்ளைக் குடை கொண்டு வந்து மோடிக்கு பிடித்தார்கள்.

எங்களைப் பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. அதிமுகவை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. என்னை நான் தலைவன் என்று சொல்லவில்லை. நான் தொண்டனாக இருக்கிறேன். தனிப்பட்ட நபருக்கு சொந்தமான கட்சி இது அல்ல. 2 கோடி தொண்டர்களின் கட்சி. ஸ்டாலின் போல் வாரிசு அரசியல் செய்யும் கட்சி அல்ல. சிலர் இந்த கட்சியை அபகரிக்கப் பார்த்தார்கள். அதை தொண்டர்கள் துணை கொண்டு காப்பாற்றினோம். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி வெல்லும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு