இஸ்லாமியர்களின் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி

நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி.
சிறுபான்மை மக்களுக்கு என்றைக்கும் அரணாக இருக்கும் கட்சி அதிமுக என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் இவ்வாறு கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் அ.தி.மு.க சார்பில் இன்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரமலான் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரணாக உள்ளது. தற்போது இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு பேணிக் காக்கப்பட்டது. குறிப்பாக சிறுபான்மையின மக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் உணர்ந்தனர். ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் நிம்மதி இன்றி இருக்கிறார்கள். இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலை மாற, அமைதி நிலை திரும்ப, அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றி அதிமுகவை வெற்றி பெறச் செய்வோம். தீய சக்திகளை தோல்வியுறச் செய்வோம். அதிமுக சாதி, மதத்திற்கெல்லாம் அப்பாற்பட்ட இயக்கம். எங்கள் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஒரு இஸ்லாமியர் என்பதை பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன். அராஜக வழியில் செல்பவர்களை விட நல்லவர்களாக சென்றால் தான் உண்மையான வெற்றி கிடைக்கும். அதிமுகவிடம் நேர்மை, நியாயம், தர்மம் உள்ளிட்டவை இருக்கிறது. நாங்கள் மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம். தமிழ்நாட்டு மக்களுடன் அ.தி.மு.க வைத்திருக்கும் கூட்டணி தான் பலமான கூட்டணி.
அ.தி.மு.க பா.ஜ.க உடன் இணக்கமாக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னார். அ.தி.மு.க எப்போதும் நேர்மையான பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu