/* */

தேர்தல் நிதி பெற வரும் சாக்கில் திருச்சியில் காலூன்ற போகும் துரை வைகோ

தேர்தல் நிதி பெற வரும் சாக்கில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட துரை வைகோ திட்டமிட்டு உள்ளார்.

HIGHLIGHTS

தேர்தல் நிதி பெற வரும் சாக்கில் திருச்சியில் காலூன்ற போகும் துரை வைகோ
X

துரை வைகோ.

திருச்சியில் தேர்தல் நிதி பெற வரும் சாக்கில் துரை வைகோ திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் காலூன்ற பார்க்கிறார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அரசியல் வரலாற்றில் திருச்சி

தமிழக அரசியல் வரலாற்றில் திருச்சிக்கு என தனி இடம் உண்டு. அதற்கு காரணம் திருச்சி தமிழகத்தின் மத்திய பகுதியாக இருப்பது என்பது மட்டுமல்ல. பகுத்தறிவு பகலவன் என போற்றப்படும் தந்தை பெரியார் தனது பகுத்தறிவு பிரச்சாரத்திற்கு ஏற்ற களமாக பயன்படுத்திக்கொண்டதும் திருச்சியை தான். பெரியார் தான் இன்றைய திராவிட கட்சிகளுக்கு வழிகாட்டி ஆவார். பெரியார் நடத்திய திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்டது தான் திமுக. திமுக விலிருந்து வெளியேற்றப்பட்டதால் எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் தான் அதிமுக. இந்த இரு இயக்கங்களும் தான் தமிழ்நாட்டை ஐம்பதாண்டுகாலத்திற்கும் மேலாக மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கின்றன. இந்த இரு கழகங்களும் அதிக அளவில் மாநில அளவிலான மாநாடுகளை நடத்தியதும் திருச்சி மண்ணில்தான்.

பெரியாரின் பாசறை

இப்படி திராவிட இயக்கங்களின் வரலாற்றில் திருச்சிக்கு என தனி வரலாற்று முத்திரை இருக்கிறது. பெரியார் ஈரோடு மண்ணில் பிறந்திருந்தாலும் அவர் சமூக புரட்சியை திருச்சி மண்ணில் பாசறை அமைத்து தான் நடத்திக்காட்டினார். அவர் தங்கி இருந்த மாளிகை திருச்சி புத்தூரில் பெரியார் மாளிகை என்ற பெயர் காரணத்தோடு விளங்கி வருகிறது.

பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்லூரிக் கல்வி என்பது எட்டாக்கனியாக இருந்த நேரத்தில் காமராஜர் முதலமைச்சராக பதவி வகித்த போது தந்தை பெரியாரால் நிலம் வழங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி தான் திருச்சி ஈ.வி.ஆர்.பெரியார் கல்லூரி. அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் போட்டியிட வேண்டுமா? வேண்டாமா? என தொண்டர்களிடம் கருத்து கேட்பதற்காக தேர்வு செய்த இடமும் திருச்சி தான். இப்படி திருச்சிக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.


தி.மு.க.வின் ஒரே எம்.பி. இவர் தான்

அத்தகைய பெருமைக்குரிய திருச்சி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றளவும் தி.மு.க. தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் என்னவோ திருச்சி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை திருச்சியில் ஒரே ஒரு முறை மட்டும் தான் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்து உள்ளார். அந்த ஒரே ஒரு நபர் என்ற பெருமைக்குரியவர் என். செல்வராஜ். 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் தி.மு.க.வின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்து உள்ளது. பிற்காலத்தில் அவர் திமுக அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தார். இடையில் சிறிது காலம் மதிமுக மற்றும் தனது இறுதி காலத்தில் ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுகவில் அவர் ஐக்கியமானது என்பது தனி கதை.

அனந்தன் நம்பியார்

திருச்சி நாடாளுமன்ற தொகுதி வரலாற்றை எடுத்துக் கொண்டால் இந்தியா குடியாட்சி பெற்ற பின்னர் நடைபெற்ற முதல் தேர்தலில் அதாவது 1951 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொது தேர்தலில் டாக்டர் மதுரம் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 1957 பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம். கே. எம். அப்துல் சலாம் வெற்றி பெற்று இருக்கிறார். 1962 மற்றும் 1967 நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தொழிற்சங்க தலைவர் அனந்தன் நம்பியார் இரண்டு முறை எம்.பி. யாக தேர்வாகியுள்ளார்.


எம்.கே.

அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த தோழர் எம்கே என அன்பாக அழைக்கப்படும் எம். கல்யாணசுந்தரம் 1971 மற்றும் 1977 தேர்தல்களில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிவாகை சூடி இருக்கிறார். 1980ல் தான் தி.மு.க.வின் செல்வராஜ் வெற்றி பெற்ற ஆண்டு.


எல். அடைக்கலராஜ்

அதனைத் தொடர்ந்து 1984 ,1989 ,1991 ,1996 ஆகிய நான்கு நாடாளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எல். அடைக்கலராஜ் எம்.பி.யாக தேர்வாகி இருந்தார். வேறு எந்த ஒரு எம்பிக்கும் இல்லாத பெருமை இவருக்கு உண்டு. காரணம் அடைக்கலராஜ் ஒரே தொகுதியில் நான்கு முறை எம்.பி.யாக இருந்து உள்ளார்.


பாஜகவின் அரங்கராஜன் குமாரமங்கலம்

1998 மற்றும் 1999நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக பாரதிய ஜனதா திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் காலூன்றியது. அக் கட்சியின் அரங்கராஜன் குமாரமங்கலம் திருச்சியில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக பதவி வகித்தார்.


தலித் எழில்மலை

ரங்கராஜன் குமாரமங்கலம் மறைவினால் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க.வின் தலித் எழில் மலை வெற்றி பெற்றார். அதிமுக பெற்ற முதல் வெற்றி இந்த தேர்தலில் தான். இதனைத் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட்டதால் எல். கணேசன் வெற்றி பெற்றார்.


அ.தி.மு.க.வின் ப குமார்

அதனைத் தொடர்ந்து 2009 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அ.தி.மு.க.வின் ப.குமார் தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்று எம்பி யாக பதவி வகித்தார்.


திருநாவுக்கரசர்

2019 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் வெற்றி பெற்று தற்போது வரை எம் பி ஆக உள்ளார். இதுதான் திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் கடந்த கால வரலாறு. ஆக இந்த வரலாற்றை புரட்டிப் பார்த்தால் கம்யூனிஸ்டு இயக்கங்கள் தொடர்ந்து நான்கு முறை எம்.பி.யாகவும் காங்கிரஸ் ஐந்து முறை எம்.பி. ஆகவும், அ.தி.மு.க. இடைத்தேர்தலையும் சேர்த்து மூன்று முறை எம்பி யாகவும் பதவியில் இருந்திருக்கிறார்கள். ஆனால் தி.மு.க. ஒரே ஒருமுறை தான் அதுவும் 1980 தேர்தலில் மட்டும் தான்.

இப்படி திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கழகங்களின் எம்.பி.க்களை விட கம்யூனிஸ்ட், காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. இதற்கு காரணம் கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்கும் போது பெரும்பாலும் கழகங்கள் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளவில்லை என்பதே உண்மை.

கங்கணம் கட்டும் திரு

இந்த சூழலில் தான் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் 18 வது நாடாளுமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியை சிட்டிங் சீட் என்ற அடிப்படையில் எப்படியாவது தக்கவைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறது. வயது 74 ஐ தாண்டி விட்டாலும் மீண்டும் திருச்சி தொகுதி எம்பி ஆக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார் தற்போதைய எம்பி திருநாவுக்கரசர்.

எதிர்ப்பு அலை

அதற்கு அவர் கூறும் காரணம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதாவது 4 லட்சத்து59 ஆயிரத்து 256 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணியின் தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவனை வீழ்த்தி இமாலய பெற்றி அடைந்தது தான். ஆனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே அவருக்கு தற்போது கடும் எதிர்ப்பு அலை வீசி வருகிறது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படுமா? அப்படியே ஒதுக்கப்பட்டாலும் திருநாவுக்கரசருக்கு அது கை கொடுக்குமா என்பது தெரியவில்லை.

முன்னணியில் ம.தி.மு.க.

தி.மு.க.வை பொறுத்தவரை பெரும்பாலும் கூட்டணி கட்சிகளுக்கு தான் திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த வகையில் நடைபெற உள்ள தேர்தலிலும் தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி , ம.தி.மு.க. ஆகிய கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வேலைகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த போட்டியில் தற்போது மதிமுக தான் முன்னணியில் உள்ளது. ஏற்கனவே 2004 ஆம் ஆண்டு இந்த தொகுதியில் ம.தி.மு.க.வின் எல். கணேசன் வெற்றி பெற்றிருப்பதால் அதை ஒரு காரணமாக காட்டி திருச்சி நாடாளுமன்ற தொகுதியைதங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க.வினர் திமுகவின் தலைமையை வைகோ மூலம் வலியுறுத்தி வருகிறார்கள்.

தேர்தல் நிதி வழங்கும் விழா

இந்த சூழலில் தான் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள சீனிவாசா மகாலில் பிப்ரவரி 12ம் தேதி திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு மத்திய மண்டல ம.தி.மு.க. சார்பில் தேர்தல் நிதி வழங்கும் விழா நடைபெற உள்ளது. திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு மற்றும் புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய ஏழு மாவட்டங்களின் சார்பில் நடைபெறும் இந்த விழாவிற்கு ம.தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா தலைமை தாங்குகிறார்.

வருகிறார் துரை வைகோ

ம.தி.மு.க.வின் முதன்மை பொதுச் செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோ இவ்விழாவில் கலந்து கொண்டு தேர்தல் நிதியை பெற்றுக் கொள்கிறார். விழாவில் கு.சின்னப்பா எம்.எல்.ஏ, திருச்சி மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வெல்லமண்டி சோமு, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் டிடிசி சேரன், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் உள்பட முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசுகிறார்கள். ம.தி.மு.க.வின் பொருளாளர் செந்திலதிபன் சிறப்புரை ஆற்றுகிறார்.

திருச்சியில் காலூன்ற...

கடந்த மாதம் தான் திருச்சியில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் துரை வைகோ பங்கேற்று விட்டு சென்றார். இப்பொழுது மீண்டும் திருச்சிக்கு வருகிறார் என்றால் அவர் தேர்தல் நிதி பெறுவதற்கு மட்டும் வரவில்லை திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் காலூன்றுவதற்கு முன்னேற்பாடுகளை செய்வதற்காகவும் வருகிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். வழக்கமாக ம.தி.மு.க.வில் தேர்தல் நிதி பெறுவது என்றால் வைகோ தான் செல்வார். ஆனால் இப்பொழுது முதல்முறையாக அவரது புதல்வன் திருச்சி வருகிறார் என்றால் சும்மாவா என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இவரும் வெளியூர் காரரே

டாக்டர் மதுரம் (நாகர்கோவில்), அனந்தன் நம்பியார் (கேரளா), கல்யாணசுந்தரம் (சேலம்), தலித் எழில்மலை (விழுப்புரம்), எல் கணேசன் (தஞ்சாவூர்), திருநாவுக்கரசர் (புதுக்கோட்டை) என திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக பெரும்பாலானவர்கள் வெளியூர்காரர்களாகவே இருந்து உள்ளனர். என். செல்வராஜ், அடைக்கலராஜ், குமார் ஆகிய மூவர் மட்டுமே மண்ணின் மைந்தர்கள் ஆவார்கள். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட வைகோவின் மகனும் திருச்சி தொகுதியில் நின்றால் சென்டிமெண்ட் ஆக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவே கருதப்படுகிறது.

Updated On: 9 Feb 2024 6:59 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  3. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  4. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  5. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  6. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!
  7. ஆரணி
    முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!
  8. காஞ்சிபுரம்
    வாலாஜாபாத் அருகே சாலை விபத்தில் லாரி ஓட்டுனர் பலி...!
  9. காஞ்சிபுரம்
    வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!