துரை முருகனுக்கும் துணை முதல்வர் பதவி: தீவிர ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின்

துரை முருகனுக்கும் துணை முதல்வர் பதவி: தீவிர ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின்
X
அமைச்சர்கள் உதயநிதி மற்றும் துரை முருகன்.
துரை முருகனுக்கும் துணை முதல்வர் பதவி வழங்கும் தீவிர ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டு உள்ளார்.

துரைமுருகனுக்கும் கிடைக்கப் போகிறது துணை முதல்வர் பதவி. தமிழக அரசியலில் குறிப்பாக திமுக வட்டாரத்தில் பேசப்படும் ஹாட் டாபிக் பேச்சு இப்போது இதுதான். திமுக இளைஞரணி தலைவரும், முதல்வர் மு க ஸ்டாலினின் மகனும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி எப்போது துணை முதலமைச்சர் ஆவார் என்பது திமுகவினர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழகத்தில் துணை முதலமைச்சர் பதவி என்பது புதிது அல்ல. ஏற்கனவே கருணாநிதி 2006 முதல் 2011 வரை முதலமைச்சராக இருந்தபோது தனது மகன் மு க ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். இது திமுகவின் முன்னுதாரணம். ஆனால் அதிமுக ஆட்சியில் எம் ஜி ஆர் காலத்திலும் சரி ஜெயலலிதா காலத்திலும் சரி துணை முதல்வர் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இருந்தது .அவர்களுக்கு வாரிசு இல்லாமல் போனதற்கும் அது ஒரு காரணம்.

ஆனால் இப்போது திமுக ஆட்சி அமைத்ததில் இருந்தே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவார் என்ற பேச்சு அடிபடத் தொடங்கியது. இப்போது அது தீவிரமாக ஒலிக்க தொடங்கி இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் வருகிற 27ஆம் தேதி அமெரிக்காவிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக செல்கிறார். அதற்கு முன்பாக இந்த துணை முதல்வர் பதவிக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்படும். அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்படும். மூத்த அமைச்சர்கள் ஒரு சிலரின் தலைகள் உருளலாம். சிலர் புதிதாக நியமிக்கப்படுவார்கள் என்ற பேச்சும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னோட்டமாக தான் தமிழகம் முழுவதும் தற்போது காவல்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களில் மட்டும் மொத்தம் 52 அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழலில் தான் துணை முதல்வர் பதவிக்கான பேச்சும் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளித்தால் கட்சியின் மூத்த அமைச்சர்களான துரைமுருகன், பொன்முடி, நேரு, ஐ பெரியசாமி, எ.வ. வேலு போன்ற மூத்த நிர்வாகிகள் கோபப்படுவார்களோ என்ற ஒரு அச்சம் திமுக மேலிடத்திற்கு உள்ளது. இதன் காரணமாகவே துணை முதல்வர் பதவி நியமனத்தில் இழுபறி நிலை நீடித்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

ஏனென்றால் இதற்கு முன்பாக ஒரு முறை துரைமுருகனிடம் செய்தியாளர்கள் தங்களுக்கு துணை முதல்வர் பதவி மீது ஆசை உண்டா என கேட்டதற்கு துணை முதல்வர் பதவி கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள் என வெளிப்படையாக நகைச்சுவையாக கூறினார். இதனை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் அவருடைய உள்ளத்தில் இருந்ததை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனை கருத்தில் கொண்டு சீனியர்களை கூல் செய்யும் விதமாக உதயநிதி ஸ்டாலினுடன் சேர்த்து ஒரு சீனியருக்கும் துணை முதல்வர் பதவி தரப்படலாம் என்று பேசப்படுகிறது. பல மாநிலங்களில் இரண்டு துணை முதல்வர்கள் இருக்கிறார்கள். அதேபோல தமிழ்நாட்டிலும் செயல்படுத்த முடியும். ஆனால் முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரையில் அவரது எண்ணமெல்லாம் 2026 சட்டமன்ற தேர்தலையே குறி வைத்து இருக்கிறது .

அது ஒருபுறம் இருந்தாலும் துணை முதல்வர் பதவியை தனது மகனுக்கு வழங்குவதற்காகவே அவரை தமிழக முழுவதும் தற்போது சுற்றுப்பயணம் செய்ய வைத்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டு இருக்கிறார். எனவே உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து அமைச்சர் துரைமுருகனும் துணை முதல்வர் ஆகலாம் என்று திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!