கனிமொழி எம்.பி.க்கு முதல்வர் ஸ்டாலின் சூட்டிய புது பெயர் என்ன தெரியுமா?

கனிமொழி எம்.பி.க்கு முதல்வர் ஸ்டாலின் சூட்டிய புது பெயர் என்ன தெரியுமா?
X

தூத்துக்குடி அரசு விழாவில் தங்கை கனிமொழியுடன் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்.

தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் கனிமொழி எம்.பி.க்கு முதல்வர் ஸ்டாலின் கர்ஜனை மொழி என பெயர் சூட்டி உள்ளார்.

இன்று தூத்துக்குடியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்றத்தில், 'கர்ஜனை மொழியாக' செயல்பட்டு தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பவர் மட்டுமில்லை, ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் குரல் கொடுப்பவர் கனிமொழி எனப் பாராட்டியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அதி கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்த நலத்திட்ட உதவிகள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது:-

நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு, மாவட்டந்தோறும் நலத்திட்ட உதவிகள் வழங்குகின்ற கூட்டங்களில் பங்கெடுத்து லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நான் வழங்கிக் கொண்டு வருகிறேன்.

2024-ஆம் ஆண்டின், முதல் நலத்திட்ட உதவிகள் வழங்குகின்ற நிகழ்ச்சியை தென் மாவட்டங்களான இந்த தூத்துக்குடி, திருநெல்வேலியில் இருந்து தொடங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இதில் இன்னும் சிறப்பு என்னவென்றால், இது என்னுடைய அருமைத் தங்கை கனிமொழி அவர்களை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மாவட்டம். நாடாளுமன்றத்தில், 'கர்ஜனை மொழியாக' செயல்பட்டு தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பவர் மட்டுமில்லை, ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் குரல் கொடுப்பவர் அவர். தூத்துக்குடியில், மழை வெள்ளப் பாதிப்பு என்று தெரிந்ததும், உடனே இங்கே ஓடோடி வந்து மக்களை காப்பாற்றியதை பார்த்தோம். அமைச்சர்கள் படையே: தங்கை கனிமொழி அவர்களைப் போலவே, தூத்துக்குடி மாவட்டத்தின் பெண் சிங்கமாக விளங்கும் கீதா ஜீவன் அவர்களும், அமைச்சராகவும், செயல் வீரராகவும் இருக்கக்கூடிய அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களும் மக்களோடு மக்களாக இருந்து மக்களை காப்பாற்றினார்கள்.

அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட பல அமைச்சர்களையும் இங்கே அனுப்பி வைத்தேன். நானும் இங்கே உடனடியாக வந்தது மட்டுமல்ல, இந்த மீட்பு பணிகள் முடியும்வரை அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும், தங்கை கனிமொழி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து தொலைபேசியில் தேவையான அனைத்து நிவாரணப் பணிகளை உத்தரவிட்டுக் கொண்டு அந்தப் பணிகளை கண்காணித்துக் கொண்டிருந்தேன்.

நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு அவர்களும் இங்கேயே இருந்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களும் இரண்டு வாரங்கள் தங்கி, உடைந்து போயிருந்த பாலத்தை எல்லாம் சரி செய்துவிட்டுத்தான் திரும்பினார். அமைச்சர் உதயநிதி அவர்களும் ஒருவார காலம் இங்கேயே பணியாற்றினார். இப்படி உடனே மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளால்தான் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடிப்படை வசதிகள் விரைவாக சரி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார்கள். தூத்துக்குடியை சீர்தூக்க திட்டங்கள்: தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கின்ற அணைக்கட்டுகள், குளங்கள் மற்றும் வாய்கால்களில் 288 இடங்களில் ஏற்பட்ட உடைப்புகள் 66 கோடியே 45 இலட்ச ரூபாய் மதிப்பில் தற்காலிக சீரமைப்பு பணிகள் மூலம் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரிசெய்யப்பட்டது. மேலும், இந்த உடைப்புகள் நிரந்தரமாக சரிசெய்ய 145 கோடியே 58 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதேபோல, திருநெல்வேலி மாவட்டத்திலும், 802 இடங்களில் ஏற்பட்ட உடைப்புகள் 27 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில் போர்க்கால அடிப்படையில் முதல் கட்டமாக உடனடியாக சரி செய்யப்பட்டது. நிரந்தரமாக சரிசெய்ய 15 கோடியே 93 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதையெல்லாம் எதற்காக நான் சொல்கிறேன் என்றால், நாங்கள் எப்போதும் உங்களோடு இருப்பவர்கள்.

நலத் திட்ட உதவிகளையும், நிவாரண உதவிகளை வழங்குவதை கடமையாக அதை ஏற்றுக்கொண்டு அத்தோடு நின்றுவிடாது, உங்களுடைய வாழ்க்கை மேம்படவேண்டும், உங்கள் குழந்தைகளுக்கு நல்ல சம்பளத்துடன் நல்ல கம்பெனிகளில் வேலை கிடைக்கவேண்டும். அந்த நோக்கத்தோடு, பல பெரிய நிறுவனங்களில் இந்த பகுதிகளில் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம்.

கொரோனா பெருந்தொற்று வந்தபோது, தி.மு.க. ஆட்சியில் இல்லை. ஆனால், 'ஒன்றிணைவோம் வா' என்று வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா பொருட்களையும் வாங்கித் தந்தோம். பல ஊர்களில் உணவுக் கூடங்கள் வைத்து, உணவு வழங்கினோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோதும், கொரோனா அலை இருந்தது. அப்போது குடும்ப அட்டைதாரர்கள் எல்லோருக்கும் 4 ஆயிரம் ரூபாய் வழங்கினோம். இதுதான் தி.மு.கவின் ஆட்சி. கொரோனாவாக இருந்தாலும், வரலாறு காணாத புயல், வெள்ளமாக இருந்தாலும் மக்களுடைய துயரங்கள் தீர்த்து, அவர்களுடைய வாழ்வாதாரத்தை மறுகட்டமைப்பு செய்ய ஒவ்வொரு தரப்பு மக்களுக்கும் தேவையான திட்டங்கள் நிறைவேற்றுவது தான் நம்முடைய திராவிட மாடல் அரசு. சும்மா பாதிக்கப்படும்போது மட்டும் வந்து பார்த்துவிட்டுச் செல்பவர்கள் இல்லை நாங்கள். இறுதி வரைக்கும் உங்களுடன் இருந்து துயரங்களை துடைப்பதின் அடையாளம்தான் இந்த நிகழ்ச்சி என்பதை நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!