தி.மு.க.செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் அதிரடி நீக்கம்

தி.மு.க.செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் அதிரடி நீக்கம்
X

ராதாகிருஷ்ணன்.

தி.மு.க. செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவர் ராதாகிருஷ்ணன். இவர் கடந்த சில ஆண்டுகளாக தி.மு.க.செய்தி தொடர்பாளர் பொறுப்பை வகித்து வந்தார். கட்சி தலைமைக்கு நெருக்கமானவர். பத்திரிகைகள், செய்தி சாதனங்களுக்கு கட்சி தொடர்பான செய்திகளை வழங்கும் பணியை கவனித்து வந்தார். தொலைக்காட்சி விவாதங்களில் தி.மு.க. சார்பில் கலந்து கொண்டு பேசுவார். கட்சி தலைவர்களின் முக்கிய சுற்றுப்பயணம், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் இவருக்கு நன்கு தெரியும். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் நேற்று செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து திடீர் என்று நீக்கப்பட்டார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகிறார்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த கருணாநிதி உள்பட பல அரசியல் கட்சி தலைவர்களுடன் ராதாகிருஷ்ணனுக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. அரசியலில் ஒரு பக்கம் தீவிரமாக இருந்தாலும் பல புத்தகங்கள், கட்டுரைகள் எழுதி உள்ளார். கட்சி நடத்திய பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றுள்ளார். 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் சட்டமன்றத்தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இவர் நீக்கப்பட்டது தி.மு.க. வில் மட்டும் அல்லாமல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர் நீக்கப்பட்டதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் தேர்தல் நடந்தது. இதில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். அவருக்கு சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் முதல்வர் ஸ்டாலின், தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். ஆனால் தி.மு.க. செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பற்றி சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து பதிவு வெளியிட்டு இருந்தார். இது தி.மு.க. வட்டாரத்திலும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்ப்பு வந்ததும் ராதாகிருஷ்ணன் அந்த பதிவை நீக்கி விட்டார். அவர் அந்த விமர்சனத்தை நீக்கினாலும் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது பற்றி கூட்டணி கட்சியான தி.மு.க.விடம் அவர்கள் புகார் செய்ததாகவும் பேசப்படுகிறது.

இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, "கட்சியினர் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும், கட்டுப்பாட்டை மீறுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்" என்று எச்சரித்து இருந்தார். இப்போது முதல் நடவடிக்கையாக ராதாகிருஷ்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil