சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை தி.மு.க. எம்பி.க்கள் கூட்டம்
அண்ணா அறிவாலயம்.
திமுக எம்.பி.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் முதல் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் மாதம் நான்காம் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா தலைமை வகித்த தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. பாரதிய ஜனதாவிற்கு தனிப்பட்ட முறையில் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் கூட்டணி பலத்துடன் இந்த முறை ஆட்சி அமைக்கிறது. மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக மோடி வருகிற 9ந்தேதி பதவி ஏற்க இருக்கிறார்.
அதே நேரத்தில் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். அகில இந்திய அளவில் இண்டியா கூட்டணிக்கு 232 இடங்கள் மட்டுமே கிடைத்தது .இதனால் இந்த கூட்டணி வலுவான எதிர்க்கட்சியாக இம்முறை நாடாளுமன்றத்தில் அமர இருக்கிறது .தமிழகத்தில் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றாலும் இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க முடியாமல் போனது திமுகவிற்கு துரதிஷ்டமாகவே கருதப்படுகிறது.
கடந்த தேர்தலின் போதும் திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெற்றும் ஒரு பலனும் கிடைக்கவில்லை.அதேபோன்ற நிலை தான் இப்போதும் தொடர்கிறது.
இந்த நிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (சனிக்கிழமை)மாலை 6 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக பொதுச்செயலாளரும் தமிழக நீர்ப்பாசன துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நாளை மாலை 6 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக வேட்பாளர்களாக போட்டியிட்ட 21 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் செயல்பட வேண்டிய விதம் தமிழக நலனுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி இந்த கூட்டத்தில் முக்கிய அறிவுரைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu