பாஜக வுடன் நெருங்கும் திமுக: விலகி செல்லும் அதிமுக- பின்னணியில் நடப்பது என்ன?

பாஜக வுடன் நெருங்கும் திமுக: விலகி செல்லும் அதிமுக- பின்னணியில் நடப்பது என்ன?
X
முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி.
பாஜக வுடன் திமுக நெருங்கி வருவது போல் தெரிகிறது. அதே நேரத்தில் அதிமுக தொடர்ந்து விலகி செல்வதால் பின்னணியில் நடப்பது என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசியலில் நெருங்கிய நண்பனும் கிடையாது. நெருங்கிய எதிரியும் இல்லை என பொதுவாக சொல்லப்படுவது உண்டு. இது உலக அரசியலுக்கு பொருந்துகிறதோ இல்லையோ இந்திய அரசியலுக்கு குறிப்பாக தமிழகத்திற்கு எப்போதுமே பொருந்தி வருவது உண்டு. அந்த வகையில் இப்போது நடக்கும் சில நிகழ்வுகள் தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சி அமைத்ததில் இருந்தே தமிழக ஆளுநராக உள்ள ஆர் என். ரவிக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம் என்றே சொல்ல வேண்டும். பொது நிகழ்வுகளில் திமுக அரசையும் குறிப்பாக திராவிட கொள்கைகளையும் விமர்சனம் செய்வது, சனாதன கொள்கைகளை மேம்படுத்தி பேசுவது ஆளுநருக்கு கைவந்த கலை. அதனை முதல்வர் ஸ்டாலினும் திமுக முன்னணி தலைவர்களும் அவ்வப்போது விமர்சனம் செய்து வருகிறார்கள்.


இதனால் கடந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநர் உரையில் கூட அவருக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை கண்டித்து ஆளுநர் ரவி அவையில் இருந்து புறக்கணித்து வெளிநடப்பு செய்தது கடந்த கால வரலாறு.

கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கூட ஆளுநர் ரவி தனது முழு உரையை படிக்காமல் குறிப்பிட்ட சில வாசகங்களை மட்டும் படித்து விட்டு சென்றார். அதேபோல சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தையும் இதுவரை திமுக அரசு தொடர்ந்து புறக்கணித்தே வந்தது. இந்த நிலையில் நாட்டின் 78வது சுதந்திர தின விழா கடந்த 15ஆம் தேதி நடந்து முடிந்திருக்கிறது.


இந்த விழாவில் ஆரம்பத்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கவர்னர் விருந்தை புறக்கணிக்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த அறிவிப்பிற்கு மாறாக திடீர் திருப்பமாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மட்டும் ஆளுநர் ரவி அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டார்கள். திமுக கூட்டணி கட்சிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இந்த விழாவில் பங்கேற்ற திமுக அமைச்சர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் நெருங்கி உறவாடியதை காண முடிந்தது. இதற்கு மு க ஸ்டாலின் அளித்த விளக்கம் ஆளுநர் என்கிற பதவிக்கு நாங்கள் மரியாதை அளித்து அவர் அளித்த விருந்தில் கலந்து கொண்டோம். கட்சி ரீதியாக ஒன்றிய அரசை எதிர்க்கிறோம். அவர்களுடைய கொள்கைகளை எதிர்க்கிறோம் எனக் கூறியிருந்தார்கள்.

அதே சமயத்தில் கடந்த 16ம்தேதி நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் முதல்வர் கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா நினைவு நாணயம் வெளியிட்டதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பெயரளவிற்கு சில கண்டன தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

ஆக மத்திய அரசையும் பிஜேபியையும் கண்மூடித்தனமாக இதுவரை எதிர்த்து வந்த திமுகவின் போக்கில் தற்போது ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. சற்று மென்மையான போக்கை கடைபிடிக்கிறார்கள். ஆட்சிக்கு நாங்கள் ஆதரவு கட்சிக்கு எதிரி என்கிற கோணத்தில் அவர்களது போக்கில் தற்போது மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

இது ஒரு புறம் இருக்க அதிமுக தரப்பிலோ பாரதிய ஜனதாவுடனான எதிர்ப்பு தொடர்ந்து நிலவிக் கொண்டே இருக்கிறது. கடந்த காலங்களில் அதிமுக பாரதிய ஜனதாவுடன் உறவு பாராட்டி ஒரு பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒரு சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தலை சந்தித்த அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியை வலுக்கட்டாயமாக வெட்டிவிட்டது. இதன் நுழைவு தேர்தலில் பாஜகவுக்கும் தோல்வி அதிமுகவிற்கும் தோல்வி.

இந்த தோல்விக்கு பின்னராவது அதிமுக சுதாரித்துக் கொண்டு மீண்டும் கூட்டணி அல்லது கட்சியை பலப்படுத்த தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துமா என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக தொண்டர்களால் மட்டுமல்ல தமிழக மக்களிடமும் இந்த எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக பாரதிய ஜனதாவுடன் இனி கூட்டணியே இல்லை என்கிற ரீதியில் தான் பேசியிருக்கிறார்கள். ஆதலால் பாரதிய ஜனதாவிடம் இருந்து அதிமுக தொடர்ந்து விலகிச் செல்வதையே காண முடிகிறது.


திட்டமிட்டபடி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட்டு பேசுகிறார். பாரதிய ஜனதாவை நெருங்கி திமுக வருவதும் அதிமுக தொடர்ந்து விலகிச் செல்வதும் தமிழக அரசியலில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் 2026 சட்டமன்ற தேர்தல் என்பது தற்போதைய ஆளும் கட்சியான திமுகவிற்கு கடும் சவாலாக இருக்கும் என்றே அரசியல் நோக்கர்களால் கணிக்கப்பட்டு வருகிறது. திமுகவுக்கு எதிர்ப்பு தமிழக முழுவதும் பரவலாக இருக்கிறது என்பது கட்சியின் தலைமைக்கு நன்றாகவே தெரியும். அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் சிதறி கிடப்பதுதான் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து விட்டால் திமுக வின் நிலைமை கஷ்டம் தான்.

அதனால் தான் அவர்கள் மத்திய அரசுடன் மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறார்களோ என கருத தோன்றுகிறது. அதே நேரத்தில் பாரதிய ஜனதாவிற்கும் நடந்து முடிந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் மதசார்பற்ற ஜனாதளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவுடன் தான் ஆட்சியை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அப்படி இருக்கையில் அந்த கட்சிகளுக்கு அடுத்தபடியாக அதிக எம் பி க்களை கொண்ட திமுக தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை முக்கிய விவாதங்களில் எதிர்க்காமல் இருந்தால் போதும் என்கிற மனப்பான்மை அவர்களிடம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தான் அவர்களும் திமுகவை சமாதானம் செய்து கொள்வதற்கு இறங்கி வருவது போல் தெரிகிறது.

எது எப்படியோ மத்திய அரசும் மாநில அரசும் எதற்கெடுத்தாலும் மோதிக்கொள்ளாமல் இணக்கமாக இருந்தால் தமிழக மக்களுக்கு நல்லது தானே. இது தமிழக மக்களாலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!