மாவட்ட செயலாளர்களை கண்டித்த ஸ்டாலின்: தீர்மானங்களும் நிறைவேற்றம்

மாவட்ட செயலாளர்களை கண்டித்த ஸ்டாலின்:  தீர்மானங்களும் நிறைவேற்றம்
X

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின். 

சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலின், கண்டிப்புடன் மாவட்ட செயலாளர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கினார்.

ஸ்டாலின் பேசியதாவது: கருணாநிதியின் 99வது பிறந்தநாளை, ஜூன் 3 முதல் தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி, திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.


திமுக இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட அமைப்புகளை, இப்பணிகளில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். கடைக்கோடித் தொண்டனின் தேவையை அந்தப் பகுதியின் அமைச்சரோ – சட்டமன்ற உறுப்பினரோ தீர்க்க வேண்டுமா? அல்லது முதலமைச்சராக இருக்கிற நான் தீர்க்க வேண்டுமா?

தொண்டன் உழைக்காமல், நிர்வாகி வேலை பார்க்காமல் யாரும் வெற்றி பெற்று வந்துவிடவில்லை. நாளைக்கே தேர்தல் வந்தால் ,அதே தொண்டன் வீட்டுக்குத்தான் நீங்கள் போயாக வேண்டும். தொண்டர்கள் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு, உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. கட்சி தொண்டர்களின் கோரிக்கைகளுக்கு உரிய முன்னுரிமை அளித்து தேவையான உதவிகளைச் செய்து தர வேண்டும் என்று, சற்று கடுமையாக ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

இன்றைய திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் சுருக்கம் வருமாறு: கருணாநிதியின் 2023-ம் ஆண்டு நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அவர் வழியில் திராவிட மாடல் ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பாடுகளை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில் மாநிலம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி வகுப்பு கூட்டங்களைத் தொடர்ச்சியான நடத்த வேண்டும்.

மதவாத நச்சு விதைகளைத் தூவிட நினைக்கும் தேச விரோத சக்திகளிடமிருந்து தமிழகத்தைக் காப்போம். அபாய சக்திகளை அடையாளம் காட்டிடத் திராவிட மாடல் பயிற்சிப் பட்டறைகளைத் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடத்த வேண்டும்.

தமிழ் நிலத்தில் சமூக நீதியும் மத நல்லிணக்கமும் செழித்துச் சிறப்புறுவதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ளாத சிலர் மதவாத நச்சு விதைகளைத் தூவுகிறார்கள். தேச விரோத அபாய சக்தியினரையும், அவர்களுக்கு துணை போகும் அடிமைகளையும், விலை போகும் வீரர்களையும் அடையாளம் காட்டி அவர்களிடமிருந்து தமிழகத்தை எவ்வித சேதாரமும் இன்றி காக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!